அடிச்சு வெளுக்கப் போகுது கனமழை.. ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்குமே வார்னிங்! ஐஎம்டி கொடுத்த அப்டேட்!
சென்னை: தமிழகத்தில் இன்று 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பம் அதிகமாக இருந்த நிலையில், தற்போது பரவலாக மழை பெய்து வருவது மக்களுக்கு ஓரளவு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு முதல் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல இடங்களில் மிதமான மழை பதிவாகியுள்ளது.

குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வானிலை
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," சுமார் 4.5 கிமீ உயரத்தில் வடக்கு உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 5.8 கிமீ உயரத்தில் மராத்வாடாயிலிருந்து தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை, உள் கர்நாடகா மற்றும் கேரளா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இன்றைய வானிலை
இதனால் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
மிதமான மழை
இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், சேலம், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கரூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வானிலை முன்னறிவிப்பு
நாளையும், நாளை மறுநாளும் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை / இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications
