வெளுத்து வாங்கப் போகுது கனமழை! கோவை, நீலகிரிக்கு குஷி நியூஸ்.. ஜில்ஜில் மோடுக்கு மாறும் தமிழ்நாடு!
சென்னை: கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும் எனவும், திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," சுமார் 0.9 கிமீ உயரத்தில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 0.9 கிமீ உயரத்தில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகள் முதல் மத்திய கிழக்கு அரபிக்கடல் வரை வடதமிழகம் மற்றும் வடகேரளம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயில்லாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக் கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும்.
7 மற்றும் 8 தேதிகள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்கிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும்.
09-10-2026 மற்றும் 10-10-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்." என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
