தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை.. எந்தெந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கும்?
சென்னை: ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதனால், இன்று சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களுடன் புதுச்சேரி, காரைக்காலிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

வரும் 31-ஆம் தேதி வரை மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நான்கு நாட்களுக்கு தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட கூடுதலாக 3 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், வரும் 31-ஆம் தேதி வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகம் வரை சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
