Weather: இன்று பலத்த காற்றுடன் மழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் சான்ஸ்? வானிலை மையம் அலர்ட்
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வட கடலோர தமிழக பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாக கூறியுள்ள வானிலை மையம், தமிழ்நாட்டில் இன்று இடி, மின்னலுடன் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் மிதமான மழை வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவு வடஉள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட சற்று அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தமிழக கடலோரப் பகுதிகளான தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கவனத்துடன் இருக்குமபடி சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடல் பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 10) தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடல் பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 10) மத்தியமேற்கு அரபிக்கடலின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும், கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் எனவும் கணித்துள்ளது.


Click it and Unblock the Notifications
