சென்னையில் இன்றும் டமால், டுமீல்.. இடி, மின்னலுடன் மழை வரும்! தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று மாலை சென்னையில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆர்வலரான பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டை போல இந்த ஆண்டு தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தீவிரமாக இல்லை. குறிப்பாக அக்னி நட்சத்திரம் தொடங்கியதிலிருந்து மழை பரவலாக பெய்து வந்தது. அக்னி வெயில் முடிந்த பின்னர் சென்னை உட்பட வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் தீவிரமடைய தொடங்கியது. மே 26 தொடங்கி ஜூன் 4 வரை வெயில் சென்னை மக்களை பெரும்பாடு படுத்த தொடங்கிவிட்டது.

தமிழகத்திலேயே சென்னையில்தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இப்படி இருக்கையில் தற்போது மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் சென்னையில் வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்திருக்கிறது. நேற்று இடி, மின்னலுடன் லேசான மழை பெய்தது. இந்நிலையில் இன்றும் மழை பெய்யும் என தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், “காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் இன்று மாலை அல்லது இரவில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக சென்னைய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இன்று தொடங்கி 15ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலையை பொறுத்தவரை, 13ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அதிகபட்ச வெப்ப நிலை 2° – 3° செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இன்று வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்திய மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 10.06.2024: மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இன்று மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்” என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications