நீலகிரியில் அங்கேயே 'மேகங்கள் நகர்ந்து போகுது'.. 2 நல்ல விஷயம்.. தமிழ்நாடு வெதர்மேன் போட்ட பதிவு
ஊட்டி: நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் மேலும் மேகங்கள் நகர்ந்து செல்வதால் அங்கு நல்ல மழை தொடரும் என்று கூறியுள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், இது இரண்டு பகுதிகளுக்கு நல்ல செய்தி என்று கூறியுள்ளது.
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கேரளாவில் மழை பெய்யும் போது எல்லாம் கனமழை பெய்யும். குறிப்பாக கேரள எல்லையில் உள்ள கன்னியாகுமரி , தென்காசி, தேனி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும்.

அந்த வகையில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம், இடுக்கி, வயநாடு, திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, மலப்புரம், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
கேரளாவில் வயநாடு, பாலக்காடு போன்ற பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் காலங்களில் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்வது வழக்கம். அந்த வகையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
அந்த வகையில் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் உள்ள பில்லூர் அணையில் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இங்கு நீலகிரி மாவட்டம், நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரளாவில் பெய்யும் மழை மூலம் தண்ணீர் வரத்து உள்ள பகுதிகள் ஆகும்.
அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 100 அடி ஆகும். இதற்கிடையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டம், அப்பர் பவானி, அவலாஞ்சி, அத்திக்கடவு மற்றும் கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளம் பாய்ந்தோடுகிறது. அங்கு நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
இது ஒரு புறம் எனில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று பிற்பகல் மணி நேரத்திற்கும் மேலாக கொட்டிய கனமழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளமாக ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செம்மண் வயல் சாலையில் வெள்ளத்தில் சிலர் சிக்கி கொண்டனர். அவர்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். பந்தலூர் பகுதி முழுவதுமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
இந்நிலையில் பந்தலூர் பகுதியில் கனமழை பெய்த நிலையில் மீண்டும் பெரிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், "நீலகிரியில் உள்ள பந்தலூர்-தேவாலா ஒரு தனித்துவமான இடம் ஆகும். தற்போது நீலகிரியில் மிகவும் மழை பெய்த இடமாகும். இன்னும் பந்தலூர் - தேவாலா பகுதியில் மேகங்கள் நகர்கின்றன. எனவே அங்கு மேலும் மழை தொடரும்.
பந்தலூர் என்பது நீர்பிடிப்பு பகுதியில் உள்ளது, எனவே மோயார் மற்றும் சாலியார் இரண்டிற்குமே இது நல்ல செய்தி ஆகும். கனமழை காரணமாக புன்னப்புழாவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முகூர்த்தி மற்றும் நீலகிரியின் மேற்கு பகுதிகளில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை, நீலகிரி அணைகளின் நீர்த்தேக்க அளவை அதிகரிக்க உதவும்" இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications