நாளை முதல் 3 நாட்களுக்கு சென்னை உள்பட தமிழகத்தில் சம்பவம் காத்திருக்கு! வெதர்மேன் கணிப்பு
சென்னை: அக்டோபர் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை தமிழகத்தில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது. அதிலும் சென்னைக்கு வழக்கம் போல் அதன் சராசரியை விட அதிக மழையை பெறும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அக்டோபர் 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை சீசா விளையாட்டு போல் சீரற்ற வானிலை மாற்றங்கள் காரணமாக வடமாவட்டங்கள் உள்பட தமிழக பகுதிகளும் மழைப் பொழிவை பெறும்.

அரபிக் கடல் மற்றும் வங்கக் கடல் ஆகிய இரண்டு கடல் பகுதிகளிலும் உருவாகியுள்ள வானிலை அமைப்புகளுக்கு இடையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களும் நடுவில் சிக்கிக் கொண்டுள்ளன. இதனால் இந்த பகுதிகளிலும் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஒட்டுமொத்தமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும். சென்னையை கேட்கவே வேண்டாம். வழக்கத்தை விட அதிக அளவு மழைப் பொழிவை பெறும் என தெரிவித்துள்ளார்.
மற்றொரு பதிவில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரி, பூண்டி, தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்றும் ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்த அவர், ஏரிகளின் இன்றைய நிலவரம் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.
ரெட்டேரி அல்லது புழல்
ரெட்டேரியின் மொத்தம் ஆழம் 21.20 அடியாகும். அதில் தற்போது 16.71 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3.300 டிஎம்சியாகும். தற்போது 2,351 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. வினாடிக்கு 1395 கனஅடி நீர் வரத்து வருகிறது. வினாடிக்கு 207 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இங்கு மழையின் அளவு 16 மி.மீ. ஆக பதிவாகியுள்ளது.
சோழவரம்
சோழவரம் ஏரியின் மொத்தம் ஆழம் 18.86 அடியாகும். அதில் தற்போது 3.32 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 1.081 டிஎம்சியாகும். தற்போது 0.142 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. வினாடிக்கு 55 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. ஆனால் வினாடிக்கு 8 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இங்கு மழையின் அளவு 20 மி.மீ. ஆக பதிவாகியுள்ளது.
செம்பரம்பாக்கம்
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்தம் ஆழம் 24 அடியாகும். அதில் தற்போது 14.64 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 டிஎம்சியாகும். தற்போது 1,466 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. வினாடிக்கு 545 கனஅடி நீர் வரத்து வருகிறது. வினாடிக்கு 184 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இங்கு மழையின் அளவு 30.40 மி.மீ. ஆக பதிவாகியுள்ளது.
பூண்டி
பூண்டி ஏரியின் மொத்தம் ஆழம் 35 அடியாகும். அதில் தற்போது 22.25 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3.231 டிஎம்சியாகும். தற்போது 0.485 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. வினாடிக்கு 430 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. வினாடிக்கு 230 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இங்கு மழை 71 மி.மீ.ராக பதிவாகியுள்ளது.
வீராணம்
வீராணம் ஏரியின் மொத்தம் ஆழம் 15.60 அடியாகும். அதில் தற்போது 11.84 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 1.465 டிஎம்சியாகும். தற்போது 0.629 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. வினாடிக்கு 345 கனஅடி நீர் வரத்து வருகிறது. வினாடிக்கு 148 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இங்கு மழையின் அளவு 5 மி.மீ. ஆக பதிவாகியுள்ளது.
கண்ணன்கோட்டை
கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியின் மொத்தம் ஆழம் 36.61 அடியாகும். அதில் தற்போது 28.18 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 0.500 டிஎம்சியாகும். தற்போது 0.242 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. வினாடிக்கு 85 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. வினாடிக்கு 16 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இங்கு கடந்த 24 மணி நேரத்தில் 69 மி.மீ.ராக மழை பதிவாகியுள்ளது.
மொத்த கொள்ளளவு
ஆக, மொத்தம் இந்த 6 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.222 டிஎம்சி. அதில் 5.315 டிஎம்சி தண்ணீர் இருப்பு இருக்கிறது. அதாவது மொத்த கொள்ளளவில் 40.2 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. மொத்த 6 ஏரிகளில் வினாடிக்கு நீர் வரத்து 2,855 கனஅடியாக உள்ளது. அது போல் வினாடிக்கு 793 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 6 ஏரிகளிலும் பெய்த மழையின் அளவு 211.40 மி.மீ. ஆகும். இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
