உச்சத்தில் சூரியன்! சென்னையில் இன்றும் வெயில் உக்கிரமாக இருக்கும்: வானிலை மையம் + வெதர்மேன் வார்னிங்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை தீவிரமடைந்த நிலையில், சென்னையில் இதமான வானிலை நிலவியது. ஆனால், நேற்று வெயில் உக்கிரமடைந்திருக்கிறது. இன்றும் வெயிலின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு கோடை மிக கடுமையாக இருந்தது. இந்த ஆண்டு இதே போல இருக்கும் என்று பயந்த நிலையில், வெயில் எதிர்பார்த்ததை போலவே தீவிரமாக இருந்தது. வழக்கமாக வட மாவட்டங்களை சுட்டெரிக்கும் வெயில் இந்த முறை கொங்கு மாவட்டங்களையும் சேர்த்து பதம் பார்த்தது. வேலூரை விட ஈரோட்டில்தான் அதிகம் வெயில் பதிவாகியிருந்தது.

இப்படி இருக்கையில் மே மாதம் தொடக்கத்தில் வானிலை அப்படியே மாறியது. தென் மாவட்டங்களில் முதலில் தலையை காட்டிய மழை, பின்னர் வட மாவட்டங்களையும் நனைக்க தொடங்கியது. குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. சென்னையில் பெரிய அளவில் மழை இல்லை என்றாலும், வட மாவட்டங்களில் மழை பெய்ததால் சென்னையில் ஓரளவு வெயில் குறைந்து காணப்பட்டது.
இது மே மாதமா அல்லது அக்டோபர், நவம்பர் மாதமா என்கிற அளவில் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. எனவே சென்னை மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருந்தனர். இப்படி இருக்கையில் நேற்று சென்னையில் வெயில் 106 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் வெயில் அதிகாமாக பதிவானது சென்னையில்தான்.
இந்நிலையில் இன்றும் சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக x தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "சென்னை மீனம்பாக்கத்தில் 41.3 டிகிரி செல்சியஸ் (106.34 டிகிரி ஃபாரன்ஹீட்), நுங்கம்பாக்கத்தில் 41.1 டிகிரி செல்சியல்ஸ் (106 டிகிரி ஃபாரன்ஹீட்) என நேற்று வெயில் பதிவாகியுள்ளது. இரண்டும் இந்த ஆண்டின் அதிகபட்ச வெயிலின் அளவாகும். இன்றும் இதில் மாற்றம் இருக்காது" என்று கூறியுள்ளார்.
அதேபோல முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பிலும் இதேபோல தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, "அடுத்த 3 தினங்களுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3° செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications