தீபாவளி லீவில் சென்ற மழை! நவ.14 காற்றழுத்தத்தால் மழை வருமா! இல்லை டிமிக்கி கொடுக்குமா? வெதர்மேன் கலகல
சென்னை: சென்னையில் 10 நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் தற்போது பிரேக் எடுத்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 15-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும்.

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
12.11.2023 மற்றும் 13.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
14.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15.11.2023 மற்றும் 16.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
இதுகுறித்து வெதர்மேன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சென்னையில் 10 நாட்களுக்கு மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இந்த நிலையில் கடைசியில் மழை சிறிது நாட்கள் பிரேக் எடுக்கிறது. சென்னையில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும். சென்னை மற்றும் பல்வேறு தமிழக பகுதிகளில் தீபாவளிக்கு மழை இருக்காது.
இன்றைய தினம் காரைக்கால், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்யும்.
அது போல் மேற்கு மண்டலமான கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யும். இங்கெல்லாம் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்தது. தற்போது மழையின் தீவிரம் குறைந்துள்ளது. எல்லாருடைய கண்களும் நவம்பர் 14 ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி மீதுதான் இருக்கிறது. இது மழையை கொடுக்குமா இல்லை டிமிக்கி கொடுக்குமா என வெதர்மேன் நகைச்சுவையாக கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications