தாம்பரம் சேலையூரில் நேற்று பெய்த மழையில் மூழ்கிய பைக்குகள்.. ஷாக் வீடியோ.. வெதர்மேன் ட்வீட்
சென்னை: சென்னையில் நேற்று இரவு பெய்த கனமழையால் தாம்பரத்தை அடுத்த சேலையூரில் இரு சக்கர வாகனங்கள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் அண்மைக்காலமாக மேற்கு திசை காற்றின் மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது மாலை , இரவு வேளைகளில் மழை பெய்து வருகிறது. காலையில் நல்ல வெயில் கொளுத்தி மாலை நேரங்களில் இந்த மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

காலையில் வெயிலால் துணி பாட்டுக்கு காய்ந்துவிடுகிறது. மாலையில் ஏசி இல்லாத வீடுகளில் இயற்கை சூழல் கொண்ட ஜில்லென்ற காற்று வீசுவதாலும் மக்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாத நிலை உள்ளது. என்னதான் மகிழ்ச்சியை கொடுத்தாலும் இந்த மழை வாகன ஓட்டிகளுக்கு துன்பத்தை கொடுக்கிறது.
சரியாக அலுவலக பணியை முடித்துக் கொண்டு செல்லும் போது இந்த மழை குறுக்கிடுவதால் போக்குவரத்தில் சிக்கி தத்தளிக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் சாலைகளில் தண்ணீர் தேங்குவதால் நடந்து செல்வோரும் பாதிக்கப்படுகிறார்கள். பள்ளம் மேடு தெரியாமல் பலர் சறுக்கி விழும் நிலையும் ஏற்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணிக்கு மேல் ஜில்லென்ற காற்று வீசி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இடிமின்னலுடன் இந்த மழை பெய்ததால் சனிக்கிழமை பொது இடங்களுக்கு பொழுதை கழிக்க சென்ற மக்கள் கடும் மழையில் சிக்கினர். கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட தென் சென்னை, வட சென்னை பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.
வேலூரில் கூட நேற்று கனமழை பெய்தது. தெற்கு மதுரை பகுதிகளிலும் கனமழை பெய்தது. இந்த நிலையில் மழைநீர் வடிகால் திட்டங்களை வடகிழக்கு பருவமழை காலத்திற்குள் சீரமைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்ததும் நீர் நிலைகளை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டதால் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கினாலும் வடிந்து விடும் நிலை உள்ளது.

இந்த நிலையில் நேற்று பெய்த கனமழையால் தாம்பரத்தை அடுத்த சேலையூரில் சாலைகளில் மழை நீர் தேங்கியிருந்தது. அந்த சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மழை நீரில் மூழ்கும் அளவுக்கு நீர் தேங்கியிருந்தது. இந்த வீடியோவை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications