வரலாறு காணாத பெருமழை- 31 பேர் பலி- 438 ரயில்கள் ரத்து- ஆந்திராவை தாக்க போகும் வங்க கடல் புயல்?
அமராவதி: ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த கனமழையால் இரு மாநிலங்களிலும் 31 பேர் பலியாகி உள்ளனர். ஆந்திரா, தெலுங்கானாவில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பல இடங்களில் தண்டவாளங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. ஆந்திரா, தெலுங்கானாவில் செப்டம்பர் 6-ந் தேதி வரை 438 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் புதிய புயலாக உருமாறினால் ஆந்திராவை தாக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் காரணமாக இந்த பெருமழை கொட்டிக் கொண்டிருக்கிறது. இந்த கனமழையால் இரு மாநிலங்களிலும் அணைகளுக்கானந நீர்வரத்து மிகவும் அதிகரித்தது. இதனையடுத்து அணைகளுக்கு வரும் உபரிநீர் அப்படியே ஆறுகளில் திறந்துவிடப்படுவதால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவின் கிருஷ்ணா, புடமேரு ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

ஆந்திராவில் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய தலைநகரான அமராவதி அப்படியே வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அமராவதி நகரின் திரும்பிய திசை எல்லாம் வெள்ளக்காடுதான். இதேபோல விஜயவாடா நகரமும் வெள்ளத்தின் கோர்ரப்ப் பிடியில் சிக்கித் தத்தளிக்கிறது. இந்த கனமழை வெள்ளத்தால் 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இரு மாநிலங்களிலும் வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 31 பேர் பலியாகி உள்ளனர்; காணாமல் போன சிலரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஜேசிபி இயந்திரத்தில் சென்று முதல்வர் சந்திரபாபு நாயுடு பார்வையிட்டார். இதேபோல முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
ஆந்திரா, தெலுங்கானாவில் பல இடங்களில் வெள்ளத்தால் தண்டவாளத்தில் இருந்த ஜல்லிக்கற்கள் அடித்துச் சேல்லப்பட்டு அவை அந்தரத்தில் தொங்கி வருகின்றன. இதனையடுத்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் வழியாக இயக்கப்படும் 438 ரயில் சேவைகளை செப்டம்பர் 6-ந் தேதி வரை நிறுத்தி வைத்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் 137 ரயில் சேவைகள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஆந்திரா, தெலுங்கானாவின் பல மாநிலங்களில் இன்றும் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக உருமாறக் கூடுமாம்; அப்படி புயலாக உருமாறினால் நாளை மறுநாள் ஆந்திராவை தாக்கும் அபாயம் உள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications