வட மாவட்டங்களை வறுத்தெடுத்த வெயில்.. 9 இடங்களில் சதம்! அதிகபட்சமாக 105 டிகிரி.. எங்கே தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் இன்று 9 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 105 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. ஈரோட்டில் 104, திருச்சியில் 102, சென்னையில் 101 டிகிரி செல்சியல் வெப்பநிலை பதிவானது.
தமிழகத்தில் கோடைக்கால சீசன் நடந்து வருகிறது. எனினும் அவ்வப்போது ஒருசில இடங்களில் மழை பெய்து வருவதால் வெயில் பெரிதாக தெரியவில்லை. குறிப்பாக தென்காசி, நெல்லை, குமரி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் வெயில் பெரிதாக இல்லை. எனினும் மற்ற மாவட்டங்களில் வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது.

9 இடங்களில் சதம்
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருந்தது. ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருந்தது. வட தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35-39° செல்சியஸ், தென் தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35-36° செல்சியஸ், தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33-36" செல்சியஸ், மலைப் பகுதிகளில் 21-29° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
பல்வேறு பகுதிகள் வெயில் சதமடித்து வருகிறது. இதனால் வெயில் தாங்க முடியாமல் மக்கள் சிரமமடைந்தனர். இன்றும் தமிழகத்தில் 9 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. ஈரோட்டில் 104, திருச்சியில் 102, சென்னையில் 101 டிகிரி செல்சியல் வெப்பநிலை பதிவானது. திருத்தணியில் 102 டிகிரி பாரன்ஹீட்டும், நாமக்கல், கரூர், மதுரை, தஞ்சையில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயிலும் பதிவாகியது.
மழைக்கு வாய்ப்பு இருக்கிறது
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மாலை 5.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, இன்று (10-04-2025) காலை 08.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் படிப்படியாக வலுவிழக்கக்கூடும். எனவே அடுத்த 7 தினங்களை பொறுத்தவரை, ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 13 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை எப்படி
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்த அளவில், இன்று முதல் 14 ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்த அளவில், இன்று மற்றும் 11-04-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னையில் எப்படி?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பின் படி இன்று (10-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (11-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications