அம்பியாக இருந்து அந்நியனாக மாறும் ‘சூரியன்’..இதை கட்டாயம் செய்யணும்! மருத்துவர்கள் கொடுக்கும் டிப்ஸ்
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் அடுத்தடுத்து வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் வெப்பநிலை 110° பாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் நோயாளிகள் கர்ப்பிணிகள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
எல் நினோ காலகட்டத்தில் மத்திய பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு, மண்ணின் ஈரப்பதம் குறைவு போன்ற காரணிகளால் நடப்பு ஆண்டில் தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஈரோட்டிலும் வேலூரிலும் 14 டிகிரி பாரன்ஹிட் கூடுதலாக பதிவு ஆகி உள்ளது

இந்த நிலையில் ஏழாம் தேதி வரை தமிழக உள் மாவட்டங்களில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரையும், தமிழகத்தில் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கோடைக் காலம்: இந்த நிலையில் கோடை காலத்தில் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக பேசிய மருத்துவர் வினோத்,”இன்று முதல் வரும் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் 110டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெயில் அதிகரிக்கும் போது ஆக்சிஜன் அளவு மிகக் குறைவாக இருக்கும் எனவே மே மாதம் முடியும் வரை மதியம் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும்.
எச்சரிக்கை: நோயாளிகள் கர்ப்பிணிகள் சற்று எச்சரிக்கையுடன் இருங்கள். ஐஸ் கட்டிகள், ஐஸ் வாட்டர், கார்பனேட் குளிர்பானங்கள் கண்டிப்பாக தவிர்க்கவும். பழச்சாறு அருந்தலாம் அதுவும் ஐஸ் போடாமல், மற்றும் இளநீர்... இது எல்லாவற்றையும் விட மிகச் சிறந்தது மோர். பாட்டிலில் எடுத்து செல்ல வேண்டும். அனைவரும் காலையிருந்தே மோர் மற்றும் நீராகாரங்களை அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.
தவிர்க்க வேண்டும்: காபி டீ இன்னும் ஒரு மாதத்திற்கு வேண்டாம். காலையில் சுடுநீரில் இஞ்சி போட்டு சாப்பிட்டு வர பித்தம் தணியும். முதலுதவி போல எலுமிச்சை எப்போதும் வீட்டில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மாமிச உணவு, அதிக எண்ணெய் மற்றும் காரம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
கவனம் அவசியம்: வெயிலில் இருந்து வந்தவுடன் சிறிது நேரம் சென்று வியர்வை தணிந்தவுடன் தண்ணீர் அருந்தவும். உடனே ஐஸ் வாட்டர் அருந்தினால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். உடனே அருந்த வேண்டுமென்றால் சிறிதளவு மிதமான வெந்நீர் அருந்தினால் உடல் சமநிலை அடையும். ஆபத்தில் இருந்து தப்பலாம். ஹீட் ஸ்ட்ரோக் உள்ளிட்ட பிரச்சினைகள் வராமல் தடுக்க வெயில் நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். கட்டாயம் செல்ல வேண்டும் என்றால் குடை, தலைக்கவசத்துடன் செல்வது நல்லது.” என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications