சுட்டெரிக்கும் வெயில்.. சட்டென மாறிய வெதர்! காரணம் இதுதான்.. வானிலை ஆய்வு மைய அதிகாரி விளக்கம்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில், நேற்று வெயில் பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு கொளுத்தியது. இன்றும் இதே போல வெயில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் இதற்கான காரணத்தை ஆய்வு மையத்தின் அதிகாரி விளக்கியுள்ளார்.
பொதுவாக மார்ச் 10 தேதியில்தான் வெயில் கடுமையை காட்ட தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே வெயில் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மார்ச் மாதம் முழுவதும் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் என்கிற அளவுக்கு சுட்டெரித்தது. ஏப்ரல், மே மாதங்கள் சொல்லவே தேவையில்லை. போதும் போதும் என்கிற அளவுக்கு வெயில் கடுமை காட்டியது. சரி ஜூன் வந்தால் சரியாயிடும் என்று நினைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பின்னர் ஒரு வழியாக ஜூலை மாதம் இந்த வெயில் சற்று குறைந்து மழை மேகங்கள் மழையை கொட்ட தொடங்கின. தமிழகம் முழுவதும் பரவலான இடங்களில் மழை பெய்து குளிர்வித்தது. இருப்பினும் நேற்று வெயில் 107 டிகிரி பாரன்ஹீட் வரை வெடித்திருக்கிறது. மதுரை, திருச்சி, நாகை உள்ளிட்ட இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவானது. இந்த திடீர் வெயிலால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். வானிலை ஆய்வு மையமும் வெப்பம் அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.
அதாவது, "தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஜூலை 31ம் தேதி ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஒரு சில இடங்களில் இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படலாம். மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று கூறியிருந்தது. இந்நிலையில் இந்த திடீர் வானிலை மாற்றம் குறித்து வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

அதாவது, "தென்மேற்கு பருவமழை தமிழகத்திற்கு அதிகமாக கிடைக்காது. மேற்கு தொடர்ச்சி மலைகள் இங்கு இருப்பதால் அரபிக்கடலில் உருவாகி வரும் காற்றை அது தடுக்கிறது. அதனால் கேரள பகுதிக்குதான் மழை பொழிவு அதிகமாக இருக்கும். தற்போது வடக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு இருப்பதால் வடமேற்கு திசையில் இருந்து வருகிற காற்று தடைபட்டுள்ளது. நிலப்பகுதியில் இருந்துதான் காற்று வருகிறது.
இவ்வாறு வரும்போது இடி-மின்னலுடன் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஆனால் அந்த மழையும் பெய்யவில்லை. அதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேற்கு திசையில் இருந்து காற்று வரவர வெப்பம் குறையும். ஆனால் கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்று இல்லாததால் தான் வெயில் இயல்பை விட அதிகரித்தது. இனி வெப்பம் படிப்படியாக குறையும். தென்மேற்கு பருவமழை காலத்தில் இதுபோன்று வெயில் தாக்குவது இயல்பான ஒன்றுதான். இது ஒன்றும் புதியது அல்ல" என மாலைமலர் செய்தி ஊடகத்திற்கு வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரி கீதா பேட்டியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications