இந்திய பெருங்கடலில் மாற்றம்.. புத்தாண்டு தினத்தில் பிச்சிக்கிட்டு கொட்டப்போகும் கனமழை! வெதர் அப்டேட்
சென்னை: இந்தியப் பெருங்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வரும் நிலையில், அது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.
வழக்கமாக தமிழ்நாட்டிற்கு தென்மேற்கு பருவமழைதான் முதலில் மழையை கொண்டு வரும். அதேபோல இந்த ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் மழை செழிப்பாக தொடங்கியது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல மழையின் அளவு போதுமானதாக இருக்கவில்லை. தமிழ்நாட்டில் ஓரளவு இயல்பாக பெய்தாலும், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் இந்த மழை காலை வாரிவிட்டது. மழை குறைந்ததால் கேரளாவில் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.

கர்நாடகாவின் நீர் பிடிப்புகளில் மழை குறைந்ததால், கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைக்கு நீர் வரத்து குறைந்தது. எனவே மேட்டூருக்கு குறைந்த அளவே தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையின் நீரை நம்பி, டெல்டா மாவட்ட விவசாயிகள் காத்திருந்த நிலையில், கர்நாடகா போதுமான நீரை திறக்காதது பெரும் ஏமாற்றமளித்தது. இப்படியாக தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அக்டோபரில் தொடங்கிய இந்த மழை, தாராளமாக பெய்தது. தமிழ்நாட்டில் மேட்டூர் தவிர மற்ற அனைத்து அணைகளும் அதன் முழு கொள்ளவை எட்டின. இந்த காலத்தில் வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னையை ஒட்டி தெற்று ஆந்திராவில் கரையை கடந்தது. எனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. இதனால் நான்கு மாவட்டங்களும் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டது.
மறுபுறம் தென் மாவட்டங்களிலும், டிச. 16 மற்றும் 17ம் தேதிகளில் பெய்த கனமழை வரலாறு காணாத வெள்ளத்தை ஏற்படுத்தியது. இதில் சுமார் 40 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், ஆண்டின் தொடக்கமான ஜனவரி 1 மற்றும் 2ம் தேதிகளில் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதாவது, இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு இருக்கிறது. எனவே ஜன.1,2 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications