கனமழையால் மிதக்கும் தூத்துக்குடி ரயில் நிலையம்.. 4 ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம்.. பயணிகளே அலர்ட்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றும் பல இடங்களில் கனமழை பெய்ததாலும், ஆற்றங்கரையோரம் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாலும் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக இன்று தூத்துக்குடியில் இருந்து புறப்படும் 4 ரயில்கள் மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று தமிழகம் நோக்கி நகர்ந்ததாலும், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக தென் தமிழகத்தில் கனமழை கொட்டி வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் அதிகாலை பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து இரவு பகலாக மழை பெய்து வருகிறது. தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்தில் ஓயாமல் தொடர்ந்து மழை கொட்டியது.
இன்றும் இந்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. தொடர்ந்து லேசான மழையாக பெய்தாலும் இடையிடையே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நெல்லையில் சேரன்மாதேவி, பாபநாசம், விகேபுரம், அம்பாசமுத்திரம் முக்கூடல் உள்ளிட்ட பகுதிகளிலும், தென்காசியில் செங்கோட்டை, கடையம், சிவசலைம், தென்காசி, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் இடைவிடாது மழை கொட்டி வருகிறது.
தொடர்ந்து மழை பெய்ததால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதேபோன்று கடனாநதி மற்றும் ராமநதி அணைகளில் இருந்து வினாடிக்கு 22,000 கன அடி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வாய்க்கால், ஓடைகளில் உடைப்பு ஏற்பட்டு வயல்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் பல ஏக்கர் நெற்பயிர்கள், வாழைகள் சேதமடைந்தன. திருச்செந்தூர் தூத்துக்குடி செல்லும் பாதையில் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து தடை பட்டுள்ளது. இந்த நிலையில் கனமழை, வெள்ளம் காரணமாக ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து புறப்படும் 4 ரயில்கள் மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மைசூர் விரைவு ரயில், முத்துநகர் விரைவு ரயில், பாலக்காடு விரைவு ரயில் மற்றும் மேட்டுப்பாளையம் விரைவு ரயில் ஆகிய 4 ரயில்களும் மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* தூத்துக்குடி மைசூர் விரைவு ரயில் (வண்டி எண் 16235) இன்று தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
* தூத்துக்குடி - சென்னைக்கு செல்லும் முத்துநகர் விரைவு ரயில் (12694) இன்று இரவு மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.* இதேபோன்று தூத்துக்குடி - பாலக்காடு விரைவு ரயில் (16791) இன்று இரவு 10 மணிக்கு மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
* இதேபோல தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் விரைவு ரயில் (16766) இன்று இரவு 10.50 மணிக்கு மீளவிட்டானில் இருந்து இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications