சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை.. ஆபீஸ் செல்வோரே கவனம்.. அடுத்த சுற்று ரெடியாகிடுச்சு
சென்னை: சென்னையில் கடும் குளிர் காற்றுக்கு நடுவில் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. நேற்று காலையில் பலத்த காற்றுடன் பல இடங்களில் மழை பெய்த நிலையில், அதன்பிறகு ஓரளவு மழை குறைந்து இருந்தது. அவ்வப்போது சாரல் மழை தான் பெய்தது. இந்நிலையில் நேற்று இரவு தொடங்கி, அதிகாலையிலும், விடியற்காலையிலும் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து கொண்டே இருந்தது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ள காரணத்தால், தமிழக கடலோர மாவட்டங்கள், இலங்கை கடற்கரை பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது. அதன்படியே சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையை பொறுத்தவரை நேற்று முன்தினம் வரை எந்த மழையும் பெரிதாக இல்லை.. நேற்று காலை முதல் வானிலை அடியோடு மாறத்தொடங்கியது. காலை 9 மணி வரை மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், திடீரென காற்றுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது. சென்னை மட்டுமின்றி சென்னையின் புறநகர் பகுதிகளிலும் நேற்று காலை பரவலாக நல்ல மழை பெய்தது. இந்த மழை காரணமாக மதுரவாயல் நெளாம்பூர் தரைப்பாலத்தில் தண்ணீர் தரைக்கு மேல்ஓடியது.
இதேபோல் கிண்டி கத்திரப்பாரா பகுதிகளில் கனமழை காரணமாக கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது. அலுவலகம் செல்லும் நேரத்தில் சரியாக மழை வெளுத்து வாங்கியதால் ஓஎம்ஆர் மற்றும் ஈசிஆர் சாலைகளும் நெரிசலில் திணறின. இதேபோல் வேளச்சேரி 100 அடி சாலை, அண்ணா சாலை, அம்பத்தூர் தொடங்கி வில்லிவாக்கம் வரையிலும், வடபழனி தொடங்கி திருமங்கலம் , அண்ணா நகர் வரையிலும் வாகன நெரிசல் கடுமையாக இருந்தது. சென்னையில் உள்ள சாலைகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். நேற்று காலையில் மழை பெய்த காரணத்தால் அலுவலகம் செல்பவர்கள் மட்டுமின்றி, பள்ளிகளுக்கு சென்ற மாணவ, மாணவிகளும் நனைந்தபடி செல்ல நேரிட்டது.
இந்நிலையில் நேற்று காலை மட்டுமே இந்த நிலை இருந்தது. மாலை வரை விட்டு விட்டுத்தான் சாரல் மழை பெய்தது. ஆனால் நேற்று இரவிற்கு மேல் வானிலை படிப்படியாக மாறத்தொடங்கியது. கடும் குளிர்காற்று வீசியது. சாரல் மழை பெய்யத்தொடங்கியது. இரவில் படிப்படியாக மழை அதிகரித்தது. இன்று அதிகாலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்தது. இந்த மழை காலையிலும் தொடர்ந்தது. இதனையடுத்தே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
சென்னையில் அலுவலகம் செல்பவர்கள் மிகவும் கவனமாக செல்வது நல்லது. ஏனெனில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை நேரங்களில் ஒரு சுற்று பலத்த மழை பெய்துவிட்டு போய்விட்டது. அடுத்த மழை விரைவில் நகரும் என்று கூறப்படுகிறது. எனவே வெளியில் செல்வோர் மழைக்கு ஏற்ற வகையில் தயாராக செல்வது நல்லது. மீண்டும் மிதமானது முதல் கனமான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications