தமிழ்நாட்டிற்கு இன்று நல்ல மழை இருக்கு.. அப்போ சென்னையில் என்ன கிளைமேட்! வீக் எண்ட் எப்படி இருக்கும்
சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்த நிலையில், இன்று மாநிலத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்.. சென்னையில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் இந்தாண்டு கோடைக் காலம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதீத வெப்பத்துடன் இருந்தது. அதிலும் குறிப்பாக ஜூன் மாதம் முதல் 15 நாட்கள் கடும் வெப்பம் வீசியது. இதனால் தமிழ்நாட்டில் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

அதன் பிறகு வெப்பம் குறைந்தது. பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் பரவலாகப் பல இடங்களிலும் நல்ல மழை பெய்தது.. அதேபோல கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்தே வருகிறது.
மழை எங்கே: நேற்றைய தினம் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது. குறிப்பாக நீலகிரி, கோவை உள்ளிட்ட இடங்களில் நல்ல மழை பெய்தது. அதேபோல சென்னையிலும் ஓரிரு இடங்களில் மழை பெய்தது. இதற்கிடையே வரும் நாட்களில் தமிழ்நாட்டில் இன்றைய தினம் எங்கே மழை பெய்யும் என்பது குறித்த தகவல்களைச் சென்னை ரெயின்ஸ் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.
சென்னை ரெயின்ஸ்: இது குறித்து சென்னை ரெயின்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவில் தீபகற்ப பகுதியில் பலவீனமான காற்றின் தன்மை காரணமாகத் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் நெல்லூர் இடையே ஓரிரு இடங்களில் இன்று இரவு தீவிர புயல் வீசக்கூடும்" என்று பதிவிட்டுள்ளனர்.
முன்னதாக வரும் நாட்களில் எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்த தகவல்களைச் சென்னை வானிலை ஆய்வு மையமும் பகிர்ந்துள்ளது.
வானிலை எப்படி: அதாவது ஆகஸ்ட் 9, 10 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல ஆகஸ்ட் 11 முதல் 15 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 90 மிமீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல நீலகிரி தேவாலாவில் 50 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும், ஹாரிசன் மலையாள லிமிடெட் (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி) தலா 40 மிமீ மழைப் பதிவாகியுள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications