TN Alert ஆப்.. இனி தமிழிலேயே உடனுக்குடன் வானிலை அப்டேட்.. உஷாரா இருக்கலாம்! ஸ்டாலின் அடித்த சிக்சர்!
சென்னை: வானிலை முன்னெச்சரிக்கை, தற்போதைய வானிலை நிலவரம் உள்ளிட்ட விபரங்களை மக்கள் தமிழிலேயே உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு TN-Alert என்னும் செல்போன் செயலியை உருவாக்கியுள்ளது. இதுதொடர்பாக இன்று நடந்த பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பேசினார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அவசர ஆய்வு நடத்திய முதல்வர் ஸ்டாலின்: இந்தக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், "வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறோம். முன்னெச்சரிக்கை என்பது இருந்தாலே எந்த பாதிப்பையும் தடுக்க முடியும். கடந்த மூன்று ஆண்டுகளாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை நாம் தொடர்ந்து எடுத்து வருகிறோம். மேலும் இதுபோன்ற கூட்டங்களையும் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழை பெய்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதை தமிழ்நாடு அரசு திறம்பட எதிர்கொண்டதன் காரணமாக பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்கள் விரைவாக மீண்டு வந்தன. அனைத்து துறை அலுவலர்களும் களத்தில் இருந்தனர். பாதிப்பு ஏற்பட்டதே தெரியாத வகையில் உடனடியாக நிலைமைகளை சமாளித்தோம்.
முன்னெச்சரிக்கை தான் முக்கியம்: அதேபோல் இந்த ஆண்டும் பேரிடர் தாக்கத்தை திறம்பட எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தலைமைச் செயலாளர் ஏற்கனவே செப்டம்பர் 14 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்கள் காவல் கண்காணிப்பாளர்கள் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர்களிடம் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அதன் மூலம் அறிவுரைகளையும் வழங்கினார்.
அனைத்தையும் அமைச்சர்கள் அதிகாரிகள் கவனித்துக் கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் வானிலை முன்னெச்சரிக்கை மூலம் பெரிய அளவிலான சேதங்களை தடுக்க முடியும். பேரிடர்களை எதிர்கொள்வதில் முன்னெச்சரிக்கை தகவல்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் நம் அரசு அதற்கான உட்கட்டமைப்பை மேம்படுத்த தனி கவனத்தை செலுத்தி வருகிறது.
வானிலை தரவுகள் உடனுக்குடன்: வானிலை தரவுகளை உடனடியாக வழங்க கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி தரம் உயர்த்தப்பட்ட மாநில அவசரகால சேவை மையத்தை தொடங்கி வைத்தோம். முன்பு இருந்த மையத்தை ஒப்பிடும்போது தற்போது பல்துறை வல்லுநர்கள் கொண்ட தொழில்நுட்ப குழுவோடு இந்த மையம் இயங்கி வருகிறது மேலும் பல துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் ஒருங்கிணைப்பு மையத்துடன் செயல்பட்டு வருகிறது.
பெய்த மழையின் அளவு எவ்வளவு என்பது பெய்யும் நேரத்தில் தெரிந்தால் தான் அணைகளில் நீர் திறப்பு மேலாண்மை வெள்ளம் முன்னெச்சரிப்பு தகவல்கள் உள்ளிட்ட பணிகளை சரியாக செய்ய முடியும். இதற்காக 1400 தானியங்கி மழை மாணிகளையும் 100 தானியங்கி வானிலை மையங்களையும் நிறுவி நிகழ்நேர தகவல்களை பெற்று வருகிறோம்.
TN Alert செயலி: இந்த தகவல்கள் பொதுமக்களுக்கு அவ்வப்போது கிடைத்தால் தங்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக இருக்கும். வானிலை முன்னெச்சரிக்கை தற்போதைய வானிலை பெறப்பட்ட மழை அளவு நீர் தேக்கங்களில் உள்ள நீர் இருப்பு உள்ளிட்ட விவரங்கள் தமிழில் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு 'TN ALERT' என்று மொபைல் ஃபோன் செயலியை உருவாக்கியுள்ளது.
மழை காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது மீனவர்கள்தான்.ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு புயல்,கனமழை குறித்த தகவல்களை, நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாக உரிய நேரத்தில் கொண்டு சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது." எனத் தெரிவித்தார்.

இந்த செயலி எப்படி இருக்கும்?: பொதுமக்களுக்கு வானிலை முன்னறிவிப்பு உள்ளிட்ட வானிலை தொடர்பான அனைத்து தகவல்களையும் ரியல் டைமில் வழங்கிட TN Alert செயலி தொடங்கப்பட்டுள்ளது. இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கிறது. பொதுமக்கள் பதிவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதில், அன்றைய நாளின் வெப்பநிலை, மழை பெய்ய வாய்ப்புள்ளதா? இடி மின்னல் எச்சரிகை உண்டா? மழைப் பொழிவு மற்றும் பெய்யும் மழையின் அளவு, ஏரி மற்றும் அணைகளில் உள்ள நீர் இருப்பு உள்ளிட்ட விவரங்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும்.












Click it and Unblock the Notifications