தென் மாவட்டங்களில் இனி மழை வெளுத்து வாங்கும்! 20 செமீ கூட பெய்ய சான்ஸ்! தமிழ்நாடு வெதர்மேன் வார்னிங்
சென்னை: தென் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிக மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், 20 செ.மீ மழை கூட பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக மாஞ்சோலை மலைப்பகுதியில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னையை மிதக்க வைத்து விட்டு கொஞ்சம் ஓய்வு எடுத்த பருவமழை தற்போது மீண்டும் தீவிரம் பெற்றுள்ளது. மிக்ஜாம் புயலின் தாக்கத்தால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட வட கடலோர மாவட்டங்கள் நல்ல மழை பொழிவை பெற்றன. குறிப்பாக தலைநகர் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருமழையை பெற்றது.

இதனால், சென்னை மாநகரமே தத்தளித்தது. தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி, இன்று தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
20 செமீ மழை பெய்யும்: இந்த நிலையில், தென் மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு மிக மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், 20 செ.மீ மழை கூட பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- குமரி - இலங்கை கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு வளிமண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.
மாஞ்சோலையில் அதிகனமழை: சில இடங்களில் 20 செண்டி மீட்டர் மழையைக் கூட பெறும். தெற்கு கேரள மாவட்டங்களான திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய இடங்களிலும் நல்ல மழை பெய்யும். டெல்டா மற்றும் பிற தென் மாவட்டங்களில் மழை பெய்யும் தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார். அதேபோல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றும் செல்லும் திசை ஆகியற்றை சுட்டிக்கட்டி இமேஜ் ஒன்றையும் தனது பதிவில் வெளியிட்டுள்ளார்.
அதில், அடுத்த இரண்டு தினங்களுக்கு தெற்கு தமிழ்நாடு (தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்யும். மாஞ்சோலை மலைப்பகுதிகள் மற்றும் குமரி பகுதியில் அதிகனழை பெய்யும். நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தேனி, மதுரை, திண்டுக்கல்லின் சில பகுதிகள் ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்யும்" எனக் கூறியுள்ளார்.
Extreme South Tamil Nadu is in for a very heavy spell due to UAC in the Comorin- Sri Lanka seas. Some places here might get >20 cm rains. South Kerala districts such as Trivandrum, Kollam will get heavy rains too.
— Tamil Nadu Weatherman (@praddy06) December 16, 2023
Delta and other south TN districts would get rains too. pic.twitter.com/L2qT9asjzP
வளி மண்டல கீழடுக்கு சுழற்சி: முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட முன்னறிவிப்பில் "தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) மழை பெய்யக்கூடும்.
நாளை எங்கெல்லாம் மழை?: நாளை (17.12.2023) தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூட்டும்.
இதேபோல், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) மழை பெய்யக்கூடும்" என கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications