8 கிமீ வேகம்.. ஸ்பீடு எடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. அடுத்த 12 மணி நேரத்துக்கு.. ஐஎம்டி அலர்ட்
சென்னை: வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் நேற்று முன் தினம் சென்னைக்கு அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. தொடர்ந்து அதே பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்து, சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 40 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இது அடுத்த 12 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே நீடிக்கும் எனவும் வானிலை மையம் கூறியிருந்தது. இந்த நிலையில் 3 கிமீ வேகத்தில் தென் மேற்கு திசையில் நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது 8 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே நீடிக்கும் எனவும், அதற்கடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும் வானிலை மையம் கூறுகையில், "தமிழகத்தில் இன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சுடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழை பெய்யக்கூடும்.
இதேபோன்று இன்று வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் அவ்வப்பொழுது பலத்த தரைக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நாளை தமிழகத்தில் நீலகிரி, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (02-12-2025): வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27-28' செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications