வங்கக்கடலில் புயல் சின்னம்! சென்னைக்கு மழை இருக்கா? வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
சென்னை: வங்கக்கடலில் உருவாகியிருந்த அர்னாப் புயல் கரையை கடந்திருக்கிறது. இந்நிலையில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருக்கிறது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார். இதனால் சென்னைக்கு மழை இருக்குமா? என்பது குறித்தும் அப்டேட் கொடுத்திருக்கிறார்.
இது குறித்து அவர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "அண்மையில் கரையை கந்த அர்னாப் புயலின் தாக்கம் முழுமையாக குறைந்ததை தொடர்ந்து, நவம்பர் முதல் வாரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தெற்கு ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.

இந்த அமைப்பின் காரணமாக சென்னை உள்ளிட்ட வட தமிழக பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இருப்பினும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்திற்கு வடக்கேதான் வலுவான மேகக் கூட்டங்கள் மற்றும் காற்று குவியும் பகுதி இருப்பதால், கடுமையான மழைப்பொழிவு பெரும்பாலும் ஆந்திர பகுதியை நோக்கியே இருக்கக்கூடும்.
தற்போதைய வானிலை மாதிரிகளின்படி, இந்த அமைப்பு ஒரு சாதாரண தாழ்வு மண்டலமாகவே நீடிக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இது புயலாக மாறாமல் பலவீனமாகவே இருந்தால், வட தமிழகத்திற்கு நல்ல மழை கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. ஒருவேளை இந்த அமைப்பு தீவிரமடைந்து பயலாக மாறினால், அதன் சுழற்சி மற்றும் மழை தரும் மேகக் கூட்டங்கள் அனைத்தும் வட தமிழகத்தை விட்டு விலகி, ஆந்திரா அல்லது அதற்கு மேல் நகர்ந்து சென்றுவிடும்.
இப்படி மட்டும் நடந்தால்.. வட தமிழகத்திற்கான மழை வாய்ப்பு முற்றிலும் கைநழுவிப் போகலாம்" என்று கூறியிருக்கிறார்.
சுருக்கமாக சொல்வதெனில், இந்த புதிய வானிலை அமைப்பு பலவீனமாக இருந்தால்தான் நமக்கு மழை கிடைக்கும். சென்னை ஓரளவுக்கு நல்ல மழையை பெறும். ஆனால், வலுவடைந்தால் நமக்கு மழை இல்லை. இது வலுவடையுமா? என்பது இன்னும் 1-2 நாட்களில் தெரிந்துவிடும் என வெதர்மேன் கூறியிருக்கிறார்.
வடகிழக்கு பருவமழை
இந்த ஆண்டு சூப்பர் எல்-நினோ ஆண்டாக இருக்கிறது. எனவே தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், கர்நாடாக தண்ணீர் கொடுக்கவில்லை. எனவே, மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்பட்டு குறுவை சாகுபடி செய்ய முடியாமல் போயிருக்கிறது. மறுபுறம், வடகிழக்கு பருவமழை ஆரம்பம் முதல் தீவிரமாக மழையை கொடுத்தது. இந்த மழை காரணமாக டெல்டாவில் சம்பா-தாளடி சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகியுள்ளனர்.
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் குறைக்கப்பட்டதால், அணை நீரை நம்பி பாசனம் செய்ய முடியாது. எனவே வடகிழக்கு பருவமழைதான் கை கொடுக்க வேண்டும். அதுவும் ஆந்திரா பக்கம் போய்விட்டால்.. இந்த ஆண்டு டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
