போடு ரகிட.. ரகிட! வெயிலுக்கு எண்டு கார்ட்.. டோட்டல் தமிழ்நாடும் குளிர போகுது! வெதர்மேன் அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது மழை தீவிரமெடுக்க தொடங்கியுள்ளது. அடுத்தடுத்த நாட்களில் வட+தென் மாவட்டங்களில் மழை நீடிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
சென்னை மற்றும் அதனை ஒட்டிய வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்திருந்தது. ஆனால், ஒட்டுமொத்த தமிழ்நாடு அளவில் பார்த்தால் மழை இயல்பை விட கொஞ்சம் அதிமாக பெய்திருக்கிறது அவ்வளவுதான். வட மாவட்டங்களில் வானிலை ஜில் என்று இருந்தாலும், தென் மாவட்டங்களில் வெயில் பட்டையை கிளப்பி வந்தது. மதுரை தொடங்கி தூத்துக்குடி வரை இதே நிலைமைதான். டெல்டாவும் இதற்கு விதிவிலக்கல்ல.

இப்படி இருக்கையில் இன்று முதல் வெயிலுக்கு 'பை பை' சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். இது குறித்து தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "திருச்சி, மதுரை, ஈரோடு, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இன்றும், நாளையும் வெயில் குறையும். தென் மற்றும் கொங்கு பகுதிகளில் மழை படிப்படியாக அதிகரிக்கும்.
நேற்று சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்திருந்தது. இன்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்யும். வட மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக மழையின் தாக்கம் இருக்கும்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக சென்னை வானிலை மையம் விடுத்திருந்த அறிக்கையிலும் இதேதான் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications