அந்தமான் நிகோபர் தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக தொடங்கிவிட்டது! சென்னைக்கு பாதிப்பா?
சென்னை: வங்கக்கடலில் விரைவில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி முதல்கட்டமாக நேற்று வளிமண்டலே மேலடுக்கு சுழற்சி உருவாகியிருந்தது. இதனை தொடர்ந்து இன்று அந்தமான் நிகோபர் தீவு பகுதியில் தாழ்வு நிலை உருவாக தொடங்கியுள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் வந்துவிட்டால் சென்னைக்கு ஆபத்து காத்திருக்கிறது என்று அர்த்தமாகிவிடுகிறது. இந்த ஆண்டும் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், அது சென்னைக்கு நெருக்கமாக கரையை கடக்க இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர். அந்த வகையில் நேற்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வங்கக்கடலில் உருவாகியிருந்தது. இன்று இது வலுப்பெற்று நிகோபர் தீவு பகுதியில் காற்றழுத்த நிலையாக உருகொண்டிருக்கிறது.

இதனை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையானது வலுப்பெற்று, மெல்ல மேற்கு-வடக்கு திசையில் நகர்ந்து வரும் என்றும் அவர் கூறியுள்ளார். நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருபெற்று அதன் பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். ஆக சென்னைக்கு பாதிப்பா இல்லையா? என்பது ஞாயிற்றுக்கிழமைதான் தெரிய வரும் என வெதர்மேன் கூறியுள்ளார்.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றால் அதற்கு 'ஃபெங்கல்' என பெயர் சூட்ட வானிலை ஆய்வு மையம் திட்டமிட்டிருந்தது. இப்படி இருக்கையில், வானிலை ஆய்வு மையம் பெயர் சூட்டுவதற்கு முன்னர் புயல் குறித்த பெயரை அறிவிப்பது பொறுத்தமாக இருக்காது என்றும் பிரதீப் ஜான் கூறியுள்ளார். ஏனெனில் செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் இதேபோன்று ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியிருந்தது. ஆனால், அது புயலாக வலுவடைவதற்குள் கரையை கடந்துவிட்டது. எனவே இப்போதே புயலுக்கு பெயரிடுவதை வெதர்மேன் விரும்பவில்லை.
மழையை பொறுத்தவரை ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 30 செ.மீக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. 20 செ.மீக்கு அதிகமாக மழை பொழிந்தால் அதை ரெட் அலர்ட் என்று குறிப்பிடுவார்கள். அந்த வகையில் பாம்பன் பகுதியில் மிக அதிக கனமழை பெய்திருக்கிறது.
இன்று முதல் 24ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும்,
25ம் தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
26ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications