Akvan: இன்று உருவாகிறது அக்வான் புயல்! ஆந்திராவில் எப்போது கரையை கடக்கிறது? மழை எப்படி இருக்கும்?
சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று உருவாகவுள்ள அக்வான் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் சின்னம் சென்னையிலிருந்து கிழக்கு தென் கிழக்கே 860 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் கடந்த 30 நாட்களில் இதுவரை அர்னாப், முரசு ஆகிய புயல்கள் உருவாகின. இவை ஆந்திரா கடற்கரை பகுதியில் கரையை கடந்தது.

இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று அதிகாலை 5.30 மணிக்கு வலுப்பெற்றது. இது தென்கிழக்கு, அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் போர்ட் பிளேருக்கு மேற்கு , தென் மேற்கே சுமார் 700 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே 860 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு தெற்கு தென்கிழக்கே 1040 கி.மீ. தொலைவிலும் மற்றும் கோபால்பூருக்கு தெற்கு - தென்கிழக்கே 1160 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
காற்றழுத்தம்
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு- வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து இன்று தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகள்,அதையொட்டிய மேற்கு- மத்திய வங்கக் கடலில் புயலாக வலுப்பெறக் கூடும். நாளை மேற்கு - மத்திய வங்கக் கடலில் தீவிர புயலாக மாறக் கூடும். இந்த புயலுக்கு அக்வான் என பெயரிடப்பட்டுள்ளது.
2 தினங்களில் வலுப்பெறும்
இது அடுத்த 2 தினங்களில் மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகரும். அதே போல் தென்கிழக்கு, தென்மேற்கு வங்கக் கடலில் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் இருந்து மாலத்தீவின் வடக்குப் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
கேரள கடலோர பகுதி
மேலும் கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வடகடலோர தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக் கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக் கூடும்.
நாளை இடி மின்னல்
இந்த நிலையில் நாளை சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழ பெய்யும். ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவக் கூடும்.
புதன்கிழமை மிக கனமழை
நாளை மறுநாள் (புதன்கிழமை) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட் டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரியிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
காற்றின் வேகம்
தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல் வருகிற 21-ஆம் தேதி வரை காற்று அதிவேகமாக வீசக்கூடும். நாளை மறுநாள் மத்திய வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 100 முதல் 130 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 145 கி.மீ. வேகத்திலும் வீசக் கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட நாட்களில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 தினங்களில் வலுப்பெறும்
வங்கக் கடலில் உருவாகும் அக்வான் புயல் நாளை தீவிர புயலாக வலுப்பெற்று அடுத்த 2 தினங்களில் ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வரும் 19ஆம் தேதி ஆந்திராவில் அக்வான் புயல் கரையை கடக்கும் என தெரிகிறது. இந்த புயலின் தன்மையை பொருத்து எந்த பகுதியில் கரையை கடக்கும் என தெரியவரும். எனினும் வரும் 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
