"பாதுகாப்பு இல்லாமல் கட்டப்பட்ட பேஸ்மெண்ட்?" வேளச்சேரி விபத்துக்கு என்ன காரணம்! ராதாகிருஷ்ணன் பேச்சு
சென்னை: வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலையில் ஏற்பட்ட விபத்தின் மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில், இது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
மிக்ஜாம் புயல் சென்னையில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. மிக்ஜாம் புயல் தந்த கனமழையால் நகரின் அனைத்து பகுதிகளிலும் நீர் தேங்கிய நிலையில், மீட்புப் பணிகள் படுவேகமாக நடந்து வருகிறது.

இதற்கிடையே சென்னை வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலையில் மழை காரணமாக திடீர் விபத்து ஏற்பட்டது. கடந்த திங்கட்கிழமை மழையின் போது அங்கே ஐந்து பர்லாங் சாலை பகுதியில் உள்ள கேஸ் பங்க் பக்கத்தில் சுமார் 50 அடி பள்ளம் ஏற்பட்டது.
விபத்து: அந்த பள்ளத்தில் 8 பேர் சிக்கிய நிலையில் அவர்களில் 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். தொடர் மழையால் மீதமுள்ள இரண்டு பேரை மீட்கவே முடியாத சூழல் ஏற்பட்டது. அவர்களை மீட்கும் பணிகள் 5ஆவது நாளாகத் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று அதிகாலை விபத்தில் சிக்கிய பங்க் ஊழியர் நரேஷ் என்பவரது உடல் மீட்கப்பட்டது. அதேபோல சற்று நேரத்திற்கு முன்பு மற்றொரு நபரின் உடலும் மீட்கப்பட்டது.
இதற்கிடையே மீட்புப் பணிகளைப் பார்வையிட்ட சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "பள்ளத்தில் சிக்கியவர்களில் நரேஷ் என்பவர் உடல் இன்று காலை மீட்கப்பட்டது. மீட்புப் பணிகளின் போது வழிகாட்டுதல்கள் இருக்கிறது. அதைப் பின்பற்றியே மீட்புப் பணிகள் நடைபெற்றது. இதன் காரணமாகவே மறைப்பாக வைக்கப்பட்டுள்ளது. சடலம் மோசமான நிலையில் இருக்கும் என்பதாலேயே இந்த ஏற்பாடு.
என்ன காரணம்: அதேநேரம் குடும்பத்தினர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். உடற்கூராய்வு செய்த பிறகு உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். அரசு மூலம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். போர்க்கால அடிப்படையில் நிவாரணம் நடந்து வருகிறது. இதில் மறைக்க எதுவுமே இல்லை. வழிகாட்டுதலின் அடிப்படையில் சடலத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை. குடும்பத்தினருக்கு என்ன நடக்கிறது என்பது தெரியும். முதல்வர், விளையாட்டுத் துறை அமைச்சர் எனப் பலரும் இதைக் கவனித்தே வருகின்றனர்.
இது எதிர்பாராது நடந்த விபத்து. அதேநேரம் இதில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தது யார், இவ்வளவு பெரிய பேஸ்மெண்ட் அமைக்கப்பட்டது எப்படி என்பது குறித்து தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது சுமார் 80 அடி பள்ளம். நான் நேரில் மீட்புப் பணிகளைப் பார்வையிட்டுள்ளேன். பெரிய ரிஸ்க் இருந்தாலும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
பேஸ்மெண்ட்கள்: தனியார் நிறுவனம் கட்டி வந்த கட்டிடத்தில் விபத்து நடந்துள்ளது. மிகப் பெரியதாக 3 பேஸ்மெண்ட்களை கட்டி வந்ததாகச் சொல்கிறார். அந்த பேஸ்மெண்ட்கள் அப்படியே சரிந்துள்ளது. அருகே இருந்த அனைத்தும் உள்ளே சரிந்துவிட்டது. இதுபோன்ற விபத்துகளில் யார் மீது தவறு என்பது உடனடியாக சொல்லிவிட முடியாது. உரிய விசாரணையை போலீசார் நடத்துவார்கள்.
தவறு செய்தவர்களை நிச்சயம் தப்பிக்க விட மாட்டோம். பேஸ்மெண்ட் பாதுகாப்பு இல்லாமல் கட்டியுள்ளது கண்கூடாகத் தெரிகிறது. போலீசார் இதில் வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்தப்படும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications