Cyclone Michaung: மிக்ஜாம் புயல் ஆந்திரா பாபட்லா அருகே 100 கி.மீ. "பேய்" காற்றுடன் கரையை கடந்தது!
விசாகப்பட்டினம்: வங்க கடலில் மையம் கொண்டு தமிழ்நாட்டில் வரலாறு காணாத பெருமழையை கொட்டிய மிக்ஜாம் புயல், ஆந்திராவின் நெல்லூர்- மச்சிலிபட்டணம் (மசூலிப்பட்டினம்) இடையே பாபட்லாவில் இன்று பிற்பகல் தொடங்கி மாலை வரை100 கி.மீ வேகத்தில் பயங்கரமான சூறவாவளி பேய் காற்றுடன் கரையை கடந்தது.
வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் தமிழ்நாட்டில் கோரத்தாண்டவமாடிவிட்டது. சென்னைக்கு மிக அருகே 30 மணி நேரம் நிலை கொண்டு நின்றது மிக்ஜாம் புயல். இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழை கொட்டித் தீர்த்தது. 30 மணிநேரத்தில் 40 செ.மீ-க்கும் அதிகமான மழை வெளுத்தெடுத்தது.

இதனால் சென்னை மாநகரும் புறநகர் பகுதிகளும் வெள்ளத்தால் தத்தளித்தன. வங்க கடல் கடும் சீற்றமாக இருந்தால் வெள்ளநீரும் கடலுக்குள் உள்ளே புக முடியவில்லை. இதனால் சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் வெள்ளநீர் வடியாமல் ஒட்டுமொத்தமாக பெரும் தத்தளிப்பும் பாதிப்பும் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு சென்னையை விட்டு மிக்ஜாம் புயல் விலகி ஆந்திராவுக்குள் நுழைந்தது. பின்னர் இன்று பிற்பகல் தொடங்கி மாலை வரை ஆந்திரா மாநிலம் நெல்லூர்- மச்சிலிபட்டணம் இடையே பாபட்லா அருகே கரையை கடந்தது மிக்ஜாம் புயல். அப்போது மணிக்கு 100 கிமீ வேகத்தில் அதிவேகமாக புயல் காற்றும் வீசியது. இந்த புயல் அடுத்த 2 மணிநேரத்தில் வலுவிழக்கும்.
முன்னதாக மிக்ஜாம் புயலால் ஆந்திராவிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. திருப்பதி சூலூர்பேட்டையில் மிக அதிகபட்சமாக 20.2 செமீ மழை பதிவானது. நெல்லூரில் 19.5, தடாவில் 13.8 செ.மீ, காளகஸ்தியில் 13.4 செமீ மழை பதிவானது. திருப்பதி ரேணிகுண்டா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
மேலும் மிக்ஜாம் புயல் கரையைக் கடப்பதால் பேருந்துகள், ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ஆந்திரா மாநில அரசு முழு வீச்சில் மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.


Click it and Unblock the Notifications
