மிக்ஜாம் வெறியாட்டம்.. நள்ளிரவு வரை சென்னையில் மழை ஓயாதாம்.. வெதர்மேன் வெளியிட்ட பரபர அப்டேட்!
சென்னை: மிக்ஜாம் புயலால் சென்னையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. ஏற்கனவே சென்னை வெள்ளக்காடாகி உள்ள நிலையில், மழை எப்போது நிற்கும் என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது. இந்நிலையில், முக்கிய அப்டேட்டை கொடுத்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் வேகமாக கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் தொடர் மழையால் சென்னை நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதக்கத் தொடங்கியுள்ளன.

கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பேருந்து போக்குவரத்து முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சாலைகள் போக்குவரத்து செல்ல முடியாமல் துண்டிக்கப்பட்டுள்ளன. ரயில் தண்டவாளங்களும் மழை நீரினால் சூழப்பட்டுள்ளன. சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குடியிருப்புகளின் கீழ் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு வருகின்றன.
சென்னை மடிப்பாக்கம் பகுதியில், தரைத் தளத்தில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. கனமழை காரணமாக வேளச்சேரி ஏரி நிரம்பியதால் தண்ணீர் சாலையை சூழ்ந்தது. வேளச்சேரி ஏரி நிரம்பியதால் பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் செல்லும் சாலையை வெள்ளம் சூழ்ந்தது. சாலையில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் அனைவரும் அவசியமின்றி வெளியில் வராமல் வீட்டிலே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மிக்ஜாம் புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மிதந்து வரும் சென்னையில், இன்று காலை முதல் மழை தொடர்ந்து கொட்டி வருவதால், நிமிடத்திற்கு நிமிடம் வெள்ள நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சென்னையில் பெய்து வரும் மழை எப்போதுதான் நிற்கும் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டு இருக்கும் மிக்ஜாம் புயல் மிக மெதுவாக நகர்ந்து வருகிறது. மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது, இது மிக வேகமாக வலிமை அடைந்து வருகிறது. தற்போது அதி தீவிர புயலாக உருவெடுத்துள்ள நிலையில், சென்னை மற்றும் வட மாவட்டங்களில் இரவு வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியுள்ளார்.
Michaung Update - Wait till mid-night for rains to stop
— Tamil Nadu Weatherman (@praddy06) December 4, 2023
Now lies in the seas off the Ponneri-Sriharikota belt. Huge clouds have bloomed south and west of the Cyclone. Rains in Chennai (KTCC) to continue till midnight. So more spells will come as long as the cyclone is near by. pic.twitter.com/v0qEOa8mNl
இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், மிக்ஜாம் புயல் அப்டேட் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக வெதர்மேன் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் பதிவில், "மழை நிற்க இன்று நள்ளிரவு வரை காத்திருக்க வேண்டும். மிக்ஜாம் புயல் இப்போது பொன்னேரி - ஸ்ரீஹரிகோட்டா பெல்ட்டிலிருந்து கடல்களில் அமைந்துள்ளது. பெரிய மேகங்கள் புயலின் தெற்கிலும் மேற்கிலும் நிலவுகின்றன. சென்னையில் மழை நள்ளிரவு வரை தொடர வாய்ப்புள்ளது. எனவே புயல் நமக்கு அருகில் இருக்கும் வரை அதிக மழை பெய்யும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மழை பொழிவு பற்றிய விவரங்களையும் வெதர்மேன் வெளியிட்டுள்ளார். அதன்படி, கடந்த 30 மணி நேரத்தில், மீனம்பாக்கத்தில் 38 செ.மீ மழை பெய்துள்ளதாகவும், இன்று காலை 8.30 மணி வரை 25 செ.மீ மழை பதிவாகி இருந்த நிலையில், அதன் பிறகு மதியம் 3.30 மணிக்குள் மேலும் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல, கடந்த 30 மணி நேரத்தில், நுங்கம்பாக்கம் பகுதியில் 36 செ.மீ மழை பெய்துள்ளதாகவும், இன்று காலை 8.30 மணி வரை 23 செ.மீ மழை பதிவாகி இருந்த நிலையில், அதன் பிறகு மதியம் 3.30 மணிக்குள் மேலும் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications