இன்று மொத்தம் 15 மாவட்டங்களில் விட்டு விளாச போகுது கனமழை! சென்னையிலும் கனமழை கொட்டும்.. வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வரும் நிலையில், இன்று மொத்தம் 15 மாவட்டங்களில் மழை கொட்டி தீர்க்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இப்போது வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளது. இந்தாண்டு பருவமழை காலத்தில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறைவாகவே மழை பெய்துள்ளது. குறிப்பாக அக். மாதம் இயல்பைக் காட்டிலும் சுமார் 43% மழை குறைவாகவே பெய்துள்ளது.

இதனால் பொதுமக்கள் கவலையில் இருந்த நிலையில், மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் கடந்த சில நாட்களாகவே மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் பகிர்ந்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
வானிலை எப்படி: இதனால் இன்று (நவ. 3) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
நாளைய தினம் (நவ. 4) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருப்பூர், ஈரோடு, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வரும் நாட்களில் வானிலை: வரும் நவ.5ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மேலும் நவ.6ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நவ.7ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நவ. 8 மற்றும் நவ. 9ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தலைநகர் சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மிதமான மழையும், ஒரு சில சமயங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரைக் கடலூர் மாவட்டம் சிதம்பரம் AWS பகுதியில் 80மிமீ மழை பெய்துள்ளது. அதேபோல அண்ணாமலை நகர் (கடலூர்), மாஞ்சோலை (திருநெல்வேலி), ராதாபுரம் (திருநெல்வேலி), காக்காச்சி (திருநெல்வேலி) ஆகிய பகுதிகளில் தலா 70 மிமீ மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் மழை பெய்துள்ளது. அதேபோல மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications