உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்தில் மழை பெய்யுமா? குளிர் ஆட்டப்போகிறது: வெதர்மேன்
சென்னை: வங்கக்கடலில் இப்போது மீண்டும் புதிதாகக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ள நிலையில், இதனால் மாநிலத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்.. அது கனமழையாக இருக்குமா என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் உள்ளது. இதற்கிடையே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இது தொடர்பாகப் பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக பெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் பாதிப்புகளும் கூட இருந்தது.

மழை: இந்த மழையால் பெரும்பாலான நீர்நிலைகள் நல்ல நிலையில் உள்ளன. இந்தச் சூழலில் தான் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.
வெதர்மேன்: இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் கனமழை பெய்யுமோ என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இந்தச் சூழலில், வரும் டிச. 17 முதல் 20 வரை தமிழகத்தில் மழை எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் பக்கத்தில், "அடுத்து உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் ஏற்கனவே மோசமாகப் பாதிக்கப்பட்டு இருக்கும் டெல்டா அல்லது தென் தமிழகத்திற்கு எந்த மழையும் இருக்காது.
குடை ரெடியா? உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னையில் நாளை மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்
இதில் வில்லன் வெஸ்டர்ன் டிஸ்டர்பன்ஸ் தான்.. அதே காலகட்டத்தில் இந்த வெஸ்டர்ன் டிஸ்டர்பன்ஸ் வருகிறது. இது நமது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையைத் தமிழக கரையைக் கடக்க அனுமதிக்காது.. கடலுக்குள் தள்ளிவிடும். மேலும், இந்தியாவின் கிழக்குக் கடற்கரை ஒட்டி இழுத்துச் செல்லும்.
தற்போதைய சூழலில் என்ன நடக்கும்:
1. தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் மழை பெய்யாது.. பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் கவலைப்படத் தேவையில்லை
2. கோவை போன்ற மேற்கு தமிழகப் பகுதிகளிலும் மழை இருக்காது.
3. டெல்டா மாவட்டங்களில் அதிக மழை பெய்யாது
4. தூத்துக்குடி - நெல்லை - தென்காசி போன்ற தென் தமிழகத்திலும் மழை பெய்வதில்லை
5. காற்றழுத்த தாழ்வு நிலை வளைந்து செல்வதால்.. அது குளிர்ந்த காற்றை இழுத்துச் செல்லும்.. இதன் காரணமாகத் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்கள் காலை நேரம் அதிக குளிர் நிலவும். பெங்களூர் - ஓசூர் - ஈரோடு - திருப்பத்தூர் - கோவை - தருமபுரி - கிருஷ்ணகிரி - வேலூரில் அடுத்த 2 நாட்கள் காலை நேரம் குளிர்ச்சியாக இருக்கும்.
6. கடல் சீற்றமாக இருக்கும், மீனவர்கள் வட தமிழக கடலுக்குள் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
தெளிவாகத் தெரியாதவை:
1. கேடிசிசி (காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு) மழை: இதனால் கேடிசிசி பகுதிகளில் மட்டுமே மழை பெய்யச் சாதகமான சூழல் இருக்கிறது. ஆனால் மழை எப்படி இருக்கும் என்பதில் தெளிவு இல்லை. வழக்கமான அளவு மழை பெய்யுமா அல்லது கனமழையாக இருக்குமா அல்லது தீவிர மழையாக இருக்குமா என்பதில் தெளிவு இல்லை. வெஸ்டர்ன் டிஸ்டர்பன்ஸ் (வில்லன்) கனமழை சென்னைக்குள் தள்ளலாம்.. சரியான நேரத்தில் இது கனமழையைத் தள்ளிவிடும். எனவே. கேடிசிசி பகுதிக்கு என்ன நடக்கும் என்பதைத் தெளிவாகச் சொல்ல இன்னும் ஒரு நாள் தேவைப்படும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications