வெள்ள பாதிப்பு நிவாரணம்.. இவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.. கன்னியாகுமரி கலெக்டர் கொடுத்த விளக்கம்
நாகர்கோவில்: வெள்ள பாதிப்பு நிவாரண நிதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்து இருக்கிறார். இந்த நிலையில் யார் யாருக்கு எல்லாம் நிவாரணத்தொகை கிடைக்கும் என்பது குறித்து கன்னியாகுமரி கலெக்டர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் வரலாறு காணாத மழை பெய்தது. தாமிரபரணி நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்ததால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால், ஆற்றங்கரையோரம் உள்ள உள்ள கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது.

நெல்லை மாநகரமும் வெள்ளத்தில் மிதந்தது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 94 செ.மீட்டர் மழை பெய்தது. இப்படி தென் மாவட்டங்களை கடந்த வாரம் மொத்தமாக வெள்ளக்காடாக மொத்தமாக மாற்றி விட்டு சென்றது பேய் மழை. நெல்லை, தூத்துக்குடி ஆகிய 2 மாவட்டங்களில் மழை வெள்ள சேதம் கடுமையாக இருந்தது. தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் வெள்ள பாதிப்பு குறைவாக இருந்தன.
ரூ.1000 நிவாரணம்: மழை விட்டு ஒருவாரம் நெருங்கி விட்ட நிலையிலும் கூட நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தற்போது வரை இயல்பு நிலை திரும்பவில்லை. ஆனால் கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் இயல்பு நிலைக்கு திரும்பியது. வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க ஸ்டாலின், வெள்ள நிவாரண நிதியாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி மாவட்டத்திற்கு ரூ.1000 நிவாரண நிதியாக வழங்கப்படும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். இதனால், தற்போது வெள்ள நிவாரண நிதி அளிப்பது தொடர்பாக வருவாய்துறையினர் தீவிரமாக கணக்கெடுத்து வருகிறார்கள். ஓரிரு நாளில் இந்த பணிகளை முடிக்க வருவாய்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
மாவட்ட கலெக்டர் விளக்கம்: இந்த நிலையில், வெள்ள பாதிப்பு நிவாரணம் கன்னியாகுமரி மாவட்டத்தில் யாருக்கு எல்லாம் கிடைக்கும் என்பது பற்றி அந்த மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் விளக்கம் அளித்தார். மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:- கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். வெள்ள பாதிப்பு நிவாரண நிதியாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரூ.1000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்து இருக்கிறார்.
அதன்படி, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள்குறித்து கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. நிவாரண முகாம்களில் தங்கியிருந்த அனைவருக்கும் நிவாரண நிதி கிடைக்க வாய்ப்பு இல்லை. முகாம்களில் தங்கியிருந்தவர்களில் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்தவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும். விளை நிலங்களில் மழை வெள்ளத்தால் 33 சதவிகிதம் பாதிப்பு இருந்தால் ஏற்கனவே வழங்கப்பட்ட நிவாரண நிதியை அதிகரித்து மொத்தமாக ரூ.17 ஆயிரமாக வழங்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications