Cyclone Akvan: திருவள்ளூரை நோக்கி வருகிறானா "அசுரன்"? அக்வான் பெயரின் அர்த்தத்தை கேட்டாலே அதிருதே!
சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகவுள்ள அக்வான் புயல், தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தை நோக்கி வர வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார். இந்த புயலுக்கு அக்வான் என்ற பெயரை ஈரான் பரிந்துரைத்துள்ளது.
தென் கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் தாழ்வு மையம் உருவாகியுள்ளது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர்.துரை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மத்திய அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல சுழற்சி, நேர்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது.
நாளை மறுநாள்
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இது நிலவுகிறது. இது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும். அதன் பிறகு நாளை மறுநாள் புயலாக வலுவடைய வாய்ப்புள்ளது. இந்த புயல் வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிஸா நோக்கி செல்ல வாய்ப்புள்ளது.
வங்கக் கடலில் உருவாகும் புயல்
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாவதால் இந்த புயலின் நகர்வு, வடமேற்கு நோக்கி செல்கிறது. தெற்கு அல்லது தென் மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவானால் , அது புயலாக மாறும் போது தமிழகம் நோக்கி வர வாய்ப்புள்ளது.
நகர்வு எங்கே அமையும்?
அது உருவாகும் இடத்தின் அடிப்படையில்தான் அதன் நகர்வு எங்கே அமையும், எங்கே கரையை கடக்கும் என்பதெல்லாம் தெரியவரும். வங்கக் கடலில் மேற்பரப்பு வெப்பநிலை அதிகமாகவே காணப்படுவதால் தற்போது அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகின்றன.
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை
வடகிழக்கு பருவமழை முடியும் வரை, தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக வாய்ப்புள்ளன. தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், வடகடலோர மாவட்டங்கள், மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.
மழை பெய்தது
நேற்று காலை முதலே சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. மேலும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. நவம்பர் 13 ஆம் தேதிக்கு பிறகு உருவாகும் புயல்கள் எல்லாம் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்வான் புயல் எங்கே?
இந்த நிலையில் இந்த அக்வான் புயல் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் செல்வக்குமார் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக் கடலில் சென்னையில் இருந்து 1200 கி.மீ. தொலைவில் புதிய காற்றழுத்த தாழ்வ பகுதி உருவாகியுள்ளது. இது உருவான இடத்தில் இருந்து 200 கி.மீ. தொலைவுக்கு மேற்கு நோக்கியே நகரும். அதன் பிறகு இது அக்வான் புயலாக மாறி வடமேற்கு திசை நோக்கி நகரும்.
திருவள்ளூர் நோக்கி வருகிறதா?
இந்த புயல் திருவள்ளூர் மாவட்டத்தை நோக்கி வர வாய்ப்புள்ளதாக செல்வகுமார் கூறியுள்ளார். இந்த அக்வான் என்ற பெயர் ஈரான் பரிந்துரைத்தது. பாரசீக மொழியில் ஒரு புராண கதையில் வரும் பெயராகும். அக்வான் என்றால் அரக்கன் என்று பொருள்.
அக்வான் என்றால் என்ன?
இதற்கு அசுரன், தீய எண்ணம் என்ற பொருளும் உண்டு. முரசுக்கு பிறகு உருவாகும் புயல் இதுவாகும். பாரசீக மொழியில் புகழ்பெற்ற இதிகாசமான ஷாநாமாவில் ஒரு வலிமையான அசுரனின் பெயர்தான் அக்வான்.
இந்த பெயரின் அர்த்தத்தை வைத்து பார்த்தால் இது கடுமையான புயலாகவும் சூறாவளியாகவும் உருமாறி அழிவை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. நவம்பர் 16-ல் உருவாகும் புயல் அசுரனை போல் நடந்துக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எதை நம்புவது?
அக்வான் புயல், ஆந்திரா- ஒடிஸா இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே வேளையில் தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமாரோ இந்த புயல் திருவள்ளூரை நோக்கி செல்லும் என தெரிவித்துள்ளார். எனினும் சென்னை வானிலை மையத்தின் அறிவுரைகளையே எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Click it and Unblock the Notifications
