2 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. இன்று மழை வெளுத்து வாங்கப்போகுது.. வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்பதால் இந்த 2 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வடமேற்கு திசையில் ஒரிசாவை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (ஆகஸ்ட் 28) முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.
இதில் குறிப்பாக இன்றும் நாளையும் (ஆகஸ்ட் 28, 29) நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புகர் பகுதிகளில் ஆகஸ்ட் 28-இல் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணி வரை தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை ஆகிய 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications