பாஜகவை வீழ்த்த உரிய நேரத்தில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் சோனியா காந்தி.. வெல்வாரா? வீழ்வாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்க் கட்சிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் முயற்சியாக திமுக உட்பட 19 எதிர்க்கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்று காணொலி காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடித்துள்ளார்.

2024ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை மனதில் வைத்து இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு அம்சம் என்றால், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கேஜ்ரிவால் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோருக்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து அழைப்பு செல்லவில்லை என்பதுதான்.

Will Sonia Gandhi get success against BJP by making opposition parties unity ahead of Lok Sabha election 2024? - Explainer

அடுத்த முக்கிய தகவல் என்னவென்றால்.. அழைப்பு சென்றாலும் கூட சமாஜ்வாதி கட்சி இந்த கூட்டத்தை புறக்கணித்து விட்டது என்பதுதான். இதற்கு முக்கியமான "ஒரு காரணம்" இருக்கிறது. அதுபற்றி பார்ப்பதற்கு முன்பாக, சோனியா காந்தியின் இந்த முயற்சி எதற்காக எடுக்கப்படுகிறது? முதல் முயற்சி வெற்றி பெற்றதா என்பதை பார்த்துவிடுவோம்.

எதிர்க்கட்சி ஜனநாயகம்

ஜனநாயக நாட்டில், ஆளும் கட்சிக்கு எந்த அளவு முக்கியத்துவம் தரப்படுகிறதோ, அதே அளவுக்கான முக்கியத்துவம் எதிர்க்கட்சிகளுக்கும் தரப்பட வேண்டும். அந்த அளவுக்கு ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சிகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. 2014 மற்றும் 2019 ம் ஆண்டுகளில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், பாஜக அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதன் காரணமாகத்தான் எதிர்க்கட்சிகளின் குரல் எடுபடாமல் போய்க்கொண்டிருக்கிறது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, எதிர்க்கட்சிகளும் கூட ஒரே குரலில் பிரச்சனைகளை எழுப்பாமல் ஆளுக்கொரு திசையாக பயணித்துக் கொண்டிருக்கின்றன. இதனால், அவர்களின் குரல், ஆள்பவர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் கூட முழுதாக சென்று சேரவில்லை என்பதுதான் எதார்த்தம்.

பலவீனமான காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த சில ஆண்டுகளாக மிக பலவீனமாக காணப்படுகிறது. அந்த காட்சி தலைவர் யார் என்பதில் மிகப் பெரிய இழுபறி நிலை நீடித்துக் கொண்டே இருக்கிறது. லோக்சபா தேர்தல் தோல்விக்கு பிறகு ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். வேறு யாரும் அந்த பதவியை ஏற்க முன்வராத நிலையில் உடல்நிலை சரியில்லாத சோனியாகாந்தி மீண்டும் அந்த பொறுப்பை கஷ்டப்பட்டு ஏற்றுக்கொண்டிருக்கிறார். இப்படியான மிகப்பெரும் தலைமை பஞ்சத்தில் சிக்கித் தவிக்கிறது காங்கிரஸ். எனவேதான், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாடு முழுக்க உள்ள எதிர்க்கட்சிகளை நோக்கி தனது நேசக்கரத்தை நீட்ட ஆரம்பித்து இருக்கிறது காங்கிரஸ் தலைமை. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் என்னவெல்லாம் நல்லது நடக்கும் என்பது பற்றி சோனியாகாந்தி நேற்றைய கூட்டத்தின்போது அழுத்தம் திருத்தமாக தெரிவித்திருக்கிறார்.

சோனியா காந்தி பேச்சு

குறிப்பாக, இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு தொடர்பாக, மாநில அரசுகள் முடிவெடுக்க அதிகாரம் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒரே குரலில் கோரிக்கை வைத்து அதன் காரணமாக மத்திய அரசு அதற்குப் பணிந்து சென்றது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார் . தடுப்பூசி பணிகளில் மத்திய அரசு மெத்தனமாக இருக்கிறது என்று தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதன் காரணமாக, தனது தடுப்பூசி கொள்கைகளை மத்திய அரசு மாற்றிக்கொண்டு செயல்பட்டு வருவதையும் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார். கண்டிப்பாக இந்த பலன்களுக்கான நற்பெயரை வேறு ஒருவர் தட்டிக் கொண்டு சென்றுவிட்டார். ஆனால், அது பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. நாம் ஒற்றுமையாக குரல் கொடுத்ததால் நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார் சோனியாகாந்தி.

ஸ்டாலின் பேச்சு

கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான, முக ஸ்டாலின், நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகள் தங்கள் ஒற்றுமையை வெளிக்காட்டி விட்டன. இந்த ஒற்றுமை மேலும் வளர வேண்டும். பாஜகவால் கூட்டாட்சித் தத்துவம் நசுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இதை மீட்டு எடுக்க வேண்டுமானால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தெரிவித்தார்.

நெருங்கி வந்த மம்தா பானர்ஜி

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மமதா பானர்ஜி காங்கிரசுடன் கைகோர்த்துள்ளார் என்பதுதான் . மேற்குவங்க மாநிலத்தை பொறுத்த அளவில் காங்கிரஸ் கட்சி கடுமையாக செல்வாக்கை இழந்து விட்டது. இது கடந்த சில தேர்தல்களில் பட்டவர்த்தனமாக தெரிகிறது. எனவே, தங்கள் மாநிலத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரசுக்கு ஒரு அரசியல் எதிரி அல்ல என்பதை புரிந்து கொண்ட மம்தா பானர்ஜி, தேசிய அளவில் பாஜகவை எதிர்கொள்ள, காங்கிரஸ் துணையை நாடி இருக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள் . மகாராஷ்டிராவில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை ஒரே கூட்டணியில் இருக்கின்றன. எனவே தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணியில் அவர்கள் இணைந்து பயணிப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

சில கட்சிகள் வரவில்லையே ஏன்?

19 கட்சிகள் ஒன்றிணைந்து இருப்பது மிகப் பெரிய முன்னெடுப்பு . அதில் மாற்று கருத்து கிடையாது. அதேநேரம், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் பாஜக கூட்டணியில் இருந்து கடந்த வருடம் பிரிந்து வந்த அகாலிதளம் கட்சியை காங்கிரஸ் இந்த கூட்டத்திற்கு அழைக்காததற்கு, வேறு காரணம் இருக்கிறது . சமாஜ்வாதி கட்சியை அழைத்தும் கூட, அவர்கள் பங்கேற்காததற்கும் அதே தான் காரணம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அந்த காரணம் வேறு ஒன்றும் கிடையாது . பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் தான் இதற்கு காரணம். பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் பெரிய கட்சியாக போட்டியாளராக இருக்கிறது. எனவே அவர்களோடு கைகோர்த்து கொள்ள உத்தர பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படும் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் விரும்பமாட்டார்கள்.

மாநில தேர்தல்கள்

பஞ்சாப் மாநிலத்திலும் காங்கிரஸ் தற்போது ஆளும் கட்சியாக இருக்கிறது. மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கு தேவையான அத்தனை வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. எனவே மற்றொரு முக்கிய கட்சியான அகாலி தளம் கட்சியுடன் இணைந்து செயல்படுவது மாநில தேர்தலில் எதிரொலிக்கும் , அது பாஜகவுக்கு ஆதரவாக சென்றுவிடக் கூடும் என்பது இந்த திட்டத்தின் பின்னணி. ஆனால் உத்தரப்பிரதேசம் மாநிலம் மற்றும் பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல்களில் எந்த மாதிரி முடிவு வருகிறதோ அதை பொறுத்து அதன் பிறகு பகுஜன் சமாஜ், சமாஜவாதி மற்றும் அகாலி தளம் ஆகிய கட்சிகள் காங்கிரஸோடு நெருக்கம் காட்ட வாய்ப்பு இருக்கிறது என்பதுதான் களநிலவரம். அதுபோன்ற சூழ்நிலை வருமானால் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தல் பாஜகவுக்கு மிகப்பெரிய சவாலாக மாறக்கூடும்.

பாஜக அரசுக்கு எதிரான அதிருப்தி

பாஜக மற்றும் நரேந்திர மோடி ஆட்சி மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது நாடு தழுவிய அளவில் மக்களிடம் அதிருப்தி அலைகள் எழுந்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி செல்வாக்கு 14 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக சமீபத்தில் இந்தியா டுடே எடுத்த கருத்துக் கணிப்பு முடிவுகள் அம்பலப்படுத்தின. அதேநேரம் திமுக, ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சி, மேற்கு வங்க மாநிலத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போன்ற பல்வேறு பிராந்திய கட்சிகள் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று வருகின்றன என்பதை அந்த கருத்துக் கணிப்பு உறுதிசெய்தது. எனவே பிராந்திய கட்சிகளை காங்கிரஸ், இணைத்து பாஜகவிற்கு எதிராக காய் நகர்த்தும் போது அது தேர்தலில் வெற்றி பெறுவதற்கு உதவும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

விலைவாசி உயர்வு

பாஜக மீது மக்கள் அதிருப்தி அதிகரிக்க காரணம், விலைவாசி உயர்வு . குறிப்பாக, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை உயர்வு. விவசாய சட்டங்கள் , குடியுரிமை சட்டம், ஜிஎஸ்டி வரியால் வணிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தி அலை, கொரோனாவை கட்டுப்படுத்தாமல் மருத்துவமனைகளில் கூட இடம் கிடைக்காத நிலை உருவாக காரணமாக இருந்தது, தடுப்பூசி பற்றாக்குறை போன்ற பல்வேறு விஷயங்கள் பாஜகவுக்கு எதிராக பூதாகரமாக கிளம்பி நிற்கின்றன. 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலை சந்திக்க செல்லும்போது நரேந்திர மோடி தலைமையிலான அரசு 10 ஆண்டுகளை பூர்த்தி செய்திருக்கும். அப்போது இயல்பாகவே மக்கள் மத்தியில் ஆட்சிக்கு எதிரான அதிருப்தி என்பது இன்னும் அதிகமாக இருக்கும். இது பாஜகவுக்கு பலவீனம் என்றால், எதிர்க்கட்சிகள் அத்தனையும் காங்கிரஸ் பக்கம் செல்வது எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. பல்வேறு கட்சிகளும் அடங்கிய கூட்டணி ஆட்சி அமையும் போதுதான் மாநிலங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுகின்றன. எதிர்க்கட்சிகளின் குரலுக்கு மதிப்பு இருக்கிறது என்பது போன்ற யதார்த்த நிலை பலருக்கும் புரிய ஆரம்பித்து இருப்பதால் கூட்டணி ஆட்சி பற்றி மக்களுக்கு இந்த இருந்த வந்த அதிருப்தி எண்ணங்கள் மறைவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கான சூழல் மத்திய பாஜக ஆட்சியின் போது ஏற்பட்டு விட்டது, அல்லது ஏற்படுத்தப்பட்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும் . சோனியாகாந்தி சரியான நேரத்தில் எடுத்த உரிய முடிவு, வருங்கால இந்திய அரசியல் நிகழ்வுகளை மாற்றப்போகும் முதல் வெற்றி படிகட்டு என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+