For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரம்: தேவைப்படுகிற ஒரு விவாதம்- அ.குமரேசன்

Google Oneindia Tamil News

மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் தனது விருப்பச் சின்னத்துக்கான பொத்தானை அழுத்தினார் வாக்காளர்.தொடர்ந்து அழுத்திக்கொண்டே இருந்தார்.நேரமானதால் எட்டிப்பார்த்த அதிகாரி, "அதான் பீப் சத்தம் கேட்டுச்சுல்ல, அப்புறம் ஏன் பட்டனை அமுக்கிக்கிட்டே இருக்கீங்க?விரலை எடுத்துட்டு வெளியே வாங்க," என்றார்."இல்லைங்க, எங்க தலைவர் நம்ம வெற்றியை உறுதிப்படுத்த உங்கவாக்கை அழுத்தமாப் பதிவு பண்ணுங்கன்னு பேசினாரு... அதான்..." என்று பதிலளித்தாராம் அந்த விசுவாச வாக்காளர்.

தேர்தல் ஜோக்குகள் போலவே வாக்குப்பதிவு எந்திரங்கள் பற்றிய ஜோக்குகளும் நிறைய இருக்கின்றன.பாமரர்களுக்கு நவீனத்தைக் கையாளத் தெரியாது என்று சொல்லப்பட்டாலும், எளிய மக்கள் எந்திரத்தைச் சரியாகவே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.வேறு சொற்களில் கூறுவதானால், ஜனநாயகத் தேர்தலில் மக்களின் வாக்குகளால் வாக்குப் பதிவு எந்திரம் வெற்றி பெற்றிருக்கிறது.கேள்வி, ஜனநாயகம் வெற்றி பெற்றிருக்கிறதா?

Writer A Kumaresans Article on EVMs and Election

தேர்தல் வருகிறபோதெல்லாம் கூடவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் (மி.வா.எ. - இவிஎம்) பற்றிய விவாதமும் வந்துவிடும்.தேர்தல் முடிந்தபின், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் எடுக்கிற எந்த நடவடிக்கையிலும் அவர்களைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்கள் தலையிட முடிவதில்லை.அடுத்த தேர்தல் வரையில் அவ்வாறு தலையிடுகிற பொறுப்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு வந்து சேர்கிறது.ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் என்ன, எதிர்க்கட்சிகளின் எதிர்வினைகள் எப்படி?அது அரசியல் விவகாரம்.

ஆளுங்கட்சியினரே மறுபடி வெற்றி பெறுகிறார்கள் என்றால், அத்துமீறல்கள் பற்றிய இதர புகார்களோடு எந்திரத் தில்லுமுல்லுகள் பற்றிய குற்றச்சாட்டுகளும் இணையும். எதிர்க்கட்சியினர் வெற்றி பெறுகிறார்கள் என்றால், எந்திரத்தில் தில்லுமுல்லு நடைபெறவில்லை என்பது நிறுவப்பட்டுவிட்டதாக முந்தைய அணியாலும், தேர்தல் ஆணையத் தரப்பிலும் சொல்லப்படும்.அடுத்த தேர்தல் வரையில் இடைக்காலத்தில் இது பற்றிப் விரிவாகப் பேசப்படுவதில்லை.அது ஜனநாயகத்தின் துயரம்.

மி.வா.எ. பற்றிய பரவலான விமர்சனம், அது தில்லுமுல்லுகளுக்கு அப்பாற்பட்டதல்ல என்பதே. சில தன்னார்வக் குழுக்கள், எந்திரத்தில் ஒரு சின்னத்திற்கான பொத்தானை அழுத்தினாலும், அது வேறு சின்னத்தில் பதிவாகுமாறு செய்ய முடியும் என்று கணினி வல்லுநர்களைக் கொண்டு நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். அந்த எந்திரங்கள் தேர்தல் ஆணையத்தால் பயன்படுத்தப்படுகிற தொழில்நுட்பங்களைக் கொண்டவை அல்ல, சின்னங்களில் மாற்றிப் பதிவாகுமாறு வடிவமைத்த மென்பொருளைக் கொண்டவையே என விளக்கம் அளிக்கப்பட்ட செய்திகளும் வந்திருக்கின்றன.

அங்கீகரிக்கப்பட்ட எந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியும் என யார் வேண்டுமானாலும் நேரில் வந்து மெய்ப்பித்துக்காட்டலாம் என்று ஆணையம் முன்பு சவால் விடுத்தது. அவ்வாறு யாரும் வரவில்லை என்று ஆணையம் அறிவித்தது. எந்திரத்தில் கோளாறுகள் ஏற்படலாம், பல வாக்குச் சாவடிகளில் எந்திரக் கோளாறு காரணமாக மாற்று எந்திரம் கொண்டுவந்து வைக்கப்படுகிற வரையில் வாக்குப் பதிவு தாமதமானதுண்டு. ஆனால் தில்லுமுல்லு நடக்காது.இது இந்தியத் தேர்தல் ஆணையம் பயன்படுத்துகிற எந்திரங்கள் உயரிய தொழில்நுட்பங்களைக் கொண்டிருப்பதற்குச் சான்று என்று பெருமிதத்தோடு பேசப்படுவதுண்டு.

ஜனநாயகத்தில் எசமானர்கள் என்று பட்டை கட்டிவிடப்பட்டுள்ள பொதுமக்கள் இந்த எந்திரங்களை நம்புகிறார்களா?"சந்தேகமே இல்லைன்னு சொல்ல முடியாது.ஆனா அதுதானே இப்ப நடைமுறையில இருக்கு?வேற மாத்து வழி இல்லாதப்ப இதை ஏத்துக்கிட்டுதானே ஆகணும்," என்று பலரும் கூறியிருக்கிறார்கள்.வேறு வழி இல்லாததால், அல்லது ஏற்கெனவே இருந்த வாக்குச் சீட்டு என்ற வழி அடைக்கப்பட்டுவிட்டதால், இந்த வழியில் மட்டுமே எசமானர்கள் நடந்தாக வேண்டும்.இது ஜனநாயகத்தில் ஒரு சோகம்.

உண்மையில் இது மிகுந்த முக்கியத்துவத்துடன் சரியான வழி வகுக்கப்பட்டாக வேண்டியதோர் அடிப்படை அக்கறை.அதற்குத் தேவை விரிவான, தொடர்ச்சியான, ஆழமான உரையாடல்கள்.அத்தகைய உரையாடல்களை அரசு மேற்கொள்ள வேண்டும்.ஆட்சியாளர்களும் எதிர்க்கட்சியாளர்களும் இதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.தேர்தல்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆணையமே இத்தகைய உரையாடல்களை முன்னெடுக்க வேண்டும்.தன்னார்வ அமைப்புகளும் ஊடகங்களும் இந்த உரையாடல்களை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும்.

Writer A Kumaresans Article on EVMs and Election

இப்படிப் பல "வேண்டும்"கள் இருக்கிற நிலையில், "ஜனநாயகக் கோட்பாடுகள் -எதிர்- மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்" என்ற கலந்துரையாடல் நிகழ்வு கவனத்திற்கு உரியதாகிறது.இணையத்தள அரங்கில் அந்த உரையாடலை, இந்த பிப்ரவரி 20 அன்று 'ஜனநாயகம் காப்போம்' (டிஃபெண்ட் டெமாக்ரசி), 'நாம்' என்ற இரு அமைப்புகள் இணைந்து நடத்தின. 'தமிழ் மையம்' அமைப்பின் நிறுவனரும், 'தமிழர் தொழில் வர்த்தக விவசாய பெருமன்றம்' என்ற கூட்டமைப்பின் அமைப்பாளருமான பாதிரியார் ஜெகத் கஸ்பர் ஒருங்கிணைப்பில், முன்னாள் ராணுவ/ஐஏஎஸ அதிகாரியும், தேர்தல் நேர்மைக்கான மன்றத்தின் (ஃபோரம் ஃபார் எலெக்டோரல் இன்டக்ரிட்டி) அமைப்பாளருமான எம்.ஜி. தேவசகாயம் மைய உரையாற்றினார்.கேள்விகளும் பதில்களும் தொடர்ந்தன. இது போலத் தேர்தல் ஆணையமே நடத்துகிற நாள் வருமா என்று யோசிக்கவைத்த அந்த நிகழ்வில் பகிரப்பட்ட கருத்துகள் பல கோணங்களில் சிந்தனை அலைகளை ஏற்படுத்தின.

"தேர்தல் நடத்துவது ஜனநாயக மாண்பிற்காகத்தானே அல்லாமல், தொழில்நுட்ப மேன்மைக்காக அல்ல," என்றார் தேவசகாயம்."இந்தியத் தேர்தல் ஆணையம் பயன்படுத்துகிற எந்திரங்கள் உலகத்திலேயே ஆகச்சிறந்தவையாக இருக்கலாம், ஆனால் பிரச்சினை அந்த எந்திரம் நம்பகமானதா இல்லையா என்பதல்ல, தேர்தலுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களைப் பயன்படுத்துவதே ஏற்கத்தக்கதுதானா என்பதே," என்று, தனது முந்தைய கட்டுரையொன்றின் வாதத்தை உரையாடலுக்கும் கொண்டுவந்தார்.

கோணங்களும் விளக்கங்களும்

பொதுவாக மி.வா.எந்திரங்களில் மோசடி செய்ய முடியும் என்ற கோணத்திலேயே எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டு வந்துள்ளன.அதற்கு வாய்ப்பில்லை என்ற கோணத்தில் விவாதங்கள் முடித்துக்கொள்ளப்பட்டுவிடும்.ஆனால் விவாதங்கள் இந்தக் கோணங்களைத் தாண்டி நேராக ஜனநாயகப் பொருத்தப்பாட்டிற்குள் செல்ல வேண்டியிருக்கிறது.

எல்லாமே நவீனமாகிக்கொண்டிருக்கிறபோது தேர்தலை மட்டும் பழைய வடிவத்திலேயே நடத்திக்கொண்டிருக்க வேண்டுமா? முந்தைய வாக்குச் சீட்டு முறைக்குத் திரும்புவதுதான் பாதுகாப்பானது என்றால், அதற்கும் முந்தைய பல வண்ணப் பெட்டிகளில் சீட்டுகளைப் போடுகிற முறைக்குத் திரும்பிவிடலாமா?பழைய குடவோலை முறைக்குப் போய்விடலாமா?இப்படிச் சிலர் கேட்கிறார்கள்.பழமையிலிருந்து விடுபட முடியாதவர்களைப் போலவே, நவீனங்களிலிருந்து விடுபட விரும்பாதவர்கள் இவர்கள்.எந்த நவீனமானாலும், வாழ்க்கையின் தேவைகளோடு இணையாவிடில் நிலைத்திருக்காது.ஜனநாயகத்தின் தேவைகளோடு இணையாத நவீனங்கள் தொடரலாமா?

"வாக்குச் சீட்டு முறையில், எண்ணிக்கைப் பணியைக் குளறுபடி இல்லாமல் முடித்து முடிவை அறிவிப்பதற்கு மிகுந்த கால தாமதம் ஆகும்.இப்போதோ, வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே முடிவுகள் உறுதியாகத் தெரிகின்றன.ஆளுங்கட்சியே மறுபடி பதவியேற்பது அல்லது எதிர்க்கட்சிகள் ஆட்சியமைப்பது என்ற ஜனநாயக முடிவு தாமதமின்றி நிகழ்கிறது." எந்திரத்திற்கு ஆதரவாக ஒலிக்கிற வலுவானதொரு வாதம் இது.

ஒரே மாநிலத்திற்கு உள்ளேயே பல கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுவது இன்று சாதாரணமாகிவிட்டது.பல மாநிலங்களுக்கு ஒரே காலகட்டத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.இறுதிக்கட்ட வாக்குப் பதிவுகள் முடிந்த பிறகுதான்வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்படுகிறது.அது வரையில் பொறுமையாகக் காத்திருக்கிற மக்கள் மேற்கொண்டு ஓரிரு நாட்கள் பொறுத்திருக்க மாட்டார்களா என்ன?மக்கள் என்ன காத்திருக்கத் தயாராக இருக்கிறார்களா அல்லது அவசரப்படுகிறார்களா என்று ஏதாவது கணிப்பு நடத்தப்பட்டிருக்கிறதா?

காகிதமே துணை

1982ல் ஒரு பரிசோதனை முயற்சியாக கேரள சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் எந்திர வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.உச்சநீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்தது.அன்றிருந்த தேர்தல் சட்டங்களில் எந்திரப் பதிவுக்கு இடமில்லை என்பதால் அந்தத் தீர்ப்பு.பின்னர் நாடாளுமன்றத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு எந்திரப் பயன்பாடு சட்டப்பூர்வமாக்கப்பட்டது.அதை எதிர்த்த மற்றொரு வழக்கில் 2013ல் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், எந்திரப் பயன்பாட்டைத் தள்ளுபடி செய்யவில்லை என்றாலும், "வாக்காளர் உறுதிப்படுத்திய காகிதத் தணிக்கைச் சான்று" (விவிபிஏடி) முறையைப் படிப்படியாகச் செயல்படுத்தஆணையிட்டது.

வாக்கு எந்திரத்துடன் இணைக்கப்பட்ட சிறு அச்சு எந்திரம் போன்ற விவிபிஏடி கருவி, வாக்காளர் தனக்கான பொத்தானை அழுத்தியவுடன், கண்ணாடி வழியாக ஒரு சீட்டைக் காட்டும்.அதில், அவர் வாக்குப் பதிவு செய்த வேட்பாளரின் வரிசை எண், பெயர், சின்னம் ஆகியவை அச்சிடப்பட்டிருக்கும்.ஏழு நொடிகளில் அந்தச் சீட்டு துண்டிக்கப்பட்டு, கருவிக்கு உள்ளேயே இருக்கும் பெட்டியில் விழும்.தேர்தல் அதிகாரியின் நேரடிப் பொறுப்பில் அந்தப் பெட்டி இருக்கும்.அந்த ஏழு நொடிக்குள் வாக்காளர் அந்தச் சீட்டைப் பார்த்து, தான் அழுத்திய சின்னத்தில்தான் வாக்கு பதிவாகியுள்ளதா என்று உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.அது தவறாகக் காட்டுகிறது என்று கருதுவாரானால் புகார் செய்யலாம். புகார் பொய்யென்று தெரியவந்தால் அபராதம் விதிக்கப்படும் என்ற எச்சரிக்கை வாசித்துக்காட்டப்பட்டு, அதிகாரிகள் முன்னிலையில் வாக்காளர் மறுபடி பொத்தானை அழுத்த அனுமதிக்கப்படும். அதில் சரியான சின்னத்தில் பதிவானதாகச் சீட்டு சொல்லுமானால் அந்தச் சோதனைப் பதிவு வாக்கு எண்ணிக்கைக்கு உட்படுத்தப்பட மாட்டாது.தவறான சின்னத்தில் பதிவானதாகக் காட்டுமானால், வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டு தேர்தல் அதிகாரியின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்படும்.

விவிபிஏடி சீட்டுமி.வா.எந்திரத்தின் நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.ஆனால், எல்லாத் தொகுதிகளிலும் இந்தக் கருவி பயன்படுத்தப்படுகிறது என்றாலும், எல்லாச் சாவடிகளிலும் எல்லா எந்திரங்களோடும் இணைக்கப்படவில்லை.உச்சநீதிமன்றமே 2 சதவீத அளவுக்குப் பயன்படுத்தினால் போதுமென்றுதான் கூறியிருக்கிறது. நாடு முழுதும் சுமார் 92 கோடி, தமிழகத்தில் கிட்டத்தட்ட 6 கோடி வாக்காளர்கள் பங்கேற்கிற தேர்தல்களில் வெறும் 2 சதவீத "உறுதிப்படுத்தப்பட்ட சான்று" சரியான விகிதம்தானா?எல்லா எந்திரங்களுக்கும் அதை இணைத்தால் என்ன?இந்தக் கேள்விகள் ஒரு புறம் இருக்கட்டும். ஆனால், "காகிதமே இல்லாத" வாக்குப்பதிவு முறையில், எப்படியோ கடைசியில் விவிபிஏடி காகிதம்தானே தேவைப்படுகிறது!

வாக்குச் சீட்டுகளை ஒருவர் தவறாக மடிப்பதால், முத்திரை மை வேறொரு சின்னத்திலும் பதிந்து அந்தச் சீட்டு செல்லாததாகிவிடும்.மி.வா.எந்திரங்கள் அதைத் தடுத்துவிட்டன என்றொரு விளக்கம் தரப்படுகிறது.ஆனால், மி.வா.எந்திரப் பதிவு எண்ணிக்கைக்கும் விவிபிஏடி எண்ணிக்கைக்கும் இடையே வேறுபாடு இருந்தது தொடர்பான புகார்கள் எழுந்துள்ளன. குறைந்த எண்ணிக்கையில் பயன்படுத்துகிறபோதே இப்படிப்பட்ட புகார்கள் வருமென்றால், நாடு முழுதும் எல்லாத் தொகுதிகளிலும் எல்லாச் சாவடிகளிலும் எல்லா மி.வா.எந்திரங்களோடும் விவிபிஏடி கருவி இணைக்கப்பட்டால் என்னவாகும்?

ஜெர்மன் தீர்ப்பு

மற்ற நாடுகளில் என்ன நிலைமை? ஜெர்மனியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வருகையை எதிர்த்து வழக்குத் தொடுக்கப்பட்டது. 2009ல் அந்நாட்டு உச்சநீதிமன்றம், வழவழா கொழகொழாவுக்கு இடமளிக்காமல், ஜனநாயகத்துக்கே எதிரானது என்ற அடிப்படையில் எந்திர வாக்குப் பதிவு செல்லாது என்று திட்டவட்டமாகத் தீர்ப்பளித்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் மி.வா.எந்திரங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.

சென்ற ஆண்டு வந்த ஒரு ஆய்வறிக்கையின்படி, 31 நாடுகளில் மி.வா.எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன அல்லது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.அவற்றில் 4 நாடுகளில் மட்டுமே எல்லாத் தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டது.11 நாடுகளில் சில பகுதிகளிலும், சிறு அளவிலான தேர்தலிகளிலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.5 நாடுகளில் இது ஒரு சோதனை முயற்சியாகத் தொடங்கப்பட்டது, அவற்றில் 3 நாடுகள் அதைத் தொடரவில்லை.சோதனைத் திட்டமாகப் பயன்படுத்தப்பட்ட 11 நாடுகள் அதை நிறுத்திக்கொள்ள முடிவு செய்துவிட்டன (ஹேமந்த் சிங்/'ஜக்ரான் ஜோஷ்').

இந்தியாவிலும், மாலத்தீவு, நேபாளம், பெல்ஜியம், எஸ்டோனியா, வெனிசுலா, ஐக்கிய அரபு அமீரகங்கள், ஜோர்டான், நமீபியா, எகிப்து, பூட்டான் ஆகிய சில நாடுகளிலும்தான் மி.வா.எந்திரப் பொத்தான்களை மக்கள் அழுத்தியாக வேண்டிய நிலைமை.

ஜெர்மன் நீதிமன்றத் தீர்ப்பைப் பார்த்தோம் அல்லவா? தேர்தல் முறை வெளிப்படைத்தன்மையோடு இருப்பதே முக்கியம், அதன் செயல்திறன் அல்ல என்று கூறுகிற அந்தத் தீர்ப்பின் பின்வரும் வாசகமும் கவனத்தில் கொள்ள வேண்டியது: "ஒரு குடியாட்சியமைப்பில் தேர்தல்கள் அனைத்து மக்களுக்குமான கருப்பொருளாகும், குடிமக்கள் அனைவருக்குமான கூட்டுச் செயல்பாடாகும்.ஆகவே, தேர்தல் நடைமுறையைக் கண்காணிப்பது கூட குடிமக்களுக்குமான கருப்பொருளாக, கடமையாக இருந்தாக வேண்டும்.குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் தேர்தலின் மையச் செயல்பாடுகளை உள்வாங்கிக்கொண்டு, உறுதிப்படுத்துவது சாத்தியமாக வேண்டும்."

ஜெர்மன் நீதிமன்றத்தின் தீர்ப்பு வேண்டுமானால் அந்த நாட்டுக்கு மட்டும் உரியதாக இருக்கலாம்.ஆனால் அந்தத் தீர்ப்பின் ஜனநாயக உள்ளடக்கம் உலகத்திற்கே பொதுவானது.

English summary
Here is an Article written by Writer A Kumaresan's Article on EVMs and Election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X