Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீதி தேவதை கண்களைக் கட்டியிருக்கலாம்... குரல் கம்பீரமானது பா. கிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

நீதி தேவதையின் இடது கையில் நடுநிலை தவறாமல் இருப்பதற்கான தராசு இருக்கிறது. வலது கையில் கூரிய வாள் உள்ளது. கண்களோ கட்டப்பட்டுள்ளன. ஆனால், நீதி தேவதையின் குரல் மட்டும் கடுமையாக ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. இப்படி யோசிப்பது ஏதோ கற்பனையான காட்சி அல்ல.

இன்றைக்கு கொரானா தீவிரமடைந்து வரும் நிலையில், அது குறித்து கவலைப்பட்ட நீதிமன்றம் கொரானா தொற்று பரவுவதற்கு தேர்தல் காரணம் என்று சுட்டிக் காட்டி, "பல முறை எச்சரித்தும் காதில் போட்டுக் கொள்ளாமல் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இது தொற்று மேலும் பரவுதற்குத் காரணம் ஆகிவிட்டது. தேர்தலை நடத்திய தேர்தல் ஆணையத்தின் மீது கொலை வழக்கு கூட பதிவிடலாம்" என்று கோபத்துடன் கூறியுள்ளது சென்னை உயர் நீதமன்றம்.

Writer Paa Krishnans Article on Judicial Activism

தொடர்ந்து, "அது மட்டுமல்ல, கொரானா கட்டுப்பாடு உள்ள நிலையில், தேர்தல் வாக்குகளை எண்ணுவதற்குத் தடை விதிக்க நேரிடும்" என்றும் கடுமையாக எச்சரித்துள்ளது.

இதைப் போல் சில தினங்களுக்கு முன்பு தில்லி உயர் நீதிமன்றம் கோபமாக கூறியிருக்கிறது.

கொடுமையான கொரானோ தொற்று பல மாநிலங்களில் தனது கோரத்தைக் காட்டி வருகிறது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லை. இதனால் ஏராளமானோர் எரியூட்டப்படும் படும் சுடுகாட்டில் தகன மேடை நிரம்பி வழிவதால், தரையில் சடலங்களைக் கிடத்தி எரியூட்டப்படுகின்றன.

ஆக்சிஜன் இல்லாமல் மாநிலங்கள் திணறி வருகின்றன. இதைக் கண்ட தில்லி நீதிமன்றம் அண்மையில், "அரசு எதையாவது செய்து ஆக்சிஜன் போதிய அளவுக்குக் கிடைக்க வகை செய்ய வேண்டும்" என்று அறிவுறுத்தி, "பிச்சை எடுத்தாவது, கடன் வாங்கியாவது, திருடியாவது ஆக்சிஜன் பெற வேண்டும்" என்று கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியது.

(இது குறித்து ஒரு விளக்கத்தையும் அளிக்க வேண்டியுள்ளது. ஆங்கிலத்தில் உள்ள சில சொலவடைகளை (Idioms) அப்படியே தமிழில் மொழிபெயர்க்கும்போது, அது விபரீதமாகத் தோன்றக் கூடும். உதாரணத்திற்கு, I will hang you என்றால் "நான் உன்னைத் தூக்கிலிடுவேன்" என்று நேரடியாகப் பொருள் கொள்ளக் கூடாது. உன்னைத் தண்டிப்பேன் என்பதுதான் பொருள். அதைப் போல் ஆங்கிலத்தில் "Beg, Borrow or steal" என்ற சொலவடை உண்டு. அது உண்மையில் எதையாவது செய்து காரியத்தை முடிக்க வேண்டும் என்று நிர்பந்திக்கும் நிலையாகும். அதை நேரடியாக மொழிபெயர்ப்பது நீதிமன்றமே திருடச் சொல்கிறது என்ற தவறான புரிதலுக்கு வழி வகுத்துவிடும்.)

நீதிமன்றங்கள் இப்படிக் கோபப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த சில ஆண்டுகளாகவே நீதிமன்றம் தெரிவித்து வரும் கருத்துகள், நீதித் துறையின் கோபத்தைப் பிரதிபலிப்பதாகவே அமைந்து வருகிறது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா உள்ளிட்டோரின் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விசாரித்த பெங்களூரு நீதிமன்றம் இதைப் போல் கோபப்பட்டதுண்டு. ஆஜரான வழக்குரைஞர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர் வாதாடுவதற்கு இரண்டு மணி நேரம் அவகாசம் அளித்தது. ஆனால், அதன் பிறகும் வழக்குரைஞர் ஆஜராகவில்லை. கால தாமதம் ஆனதால், கோபமடைந்த நீதிமன்றம், "அவகாசம் அளித்தும் வழக்கில் ஆஜராகாவிட்டால், மேலும் வாதிட அனுமதி இல்லாமல், தீர்ப்பு கூறுவதற்கான நாளை அறிவிக்க வேண்டியிருக்கும்" என்று கூறி தனது கோபத்தை வெளிப்படுத்தியது. அதையடுத்து, வழக்கு விசாரணை முடிந்து, சில வாரங்களிலேயே தீர்ப்பும் வெளியானது.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மின்சாரம் இல்லாமல் வழக்குகள் தொடராமல் நீண்ட நேரம் நின்று போனது. அதையொட்டி, ஒரு நீதிபதி, "இப்படி மின்சாரம், தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் போனால், நீதிமன்றம் எதற்கு? பேசாமல் மூடிவிடலாமே..." என்று கோபம் வெளிப்படும் வகையில் குறிப்பிட்டார். அது அரசின் மெத்தனப் போக்கைக் காட்டுவதாகவே அமைந்தது என்று பல தரப்பினர் கருத்து கூறினர்.

தில்லி உள்பட பல வடமாநிலங்களில் சுற்றுச்சூழல் பாழ்பட்டு வருகிறது. மாசு அதிகரித்து வருகிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மகால் மீது பதிக்கப்பட்டுள்ள பளிங்கு கற்கள் ஒளி இழந்து, மாசு படிந்து போனதால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பெரிதும் கவலைப்பட்டனர். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டு ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து அம்சங்களையும் முழுமையாக விசாரித்த நீதிமன்றம், "இப்படி தாஜ்மகால் பாழாகும் என்றால், பேசாமல் அதை இடித்துத் தள்ளி விடலாமே, எதற்காக இப்படி வைத்திருக்க வேண்டும்" என்று கோபத்துடன் கூறியது.

பிறகு, அதைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடைமுறைகளையும் எடுப்பதாக அரசு உறுதியளித்தது.

2019ம் ஆண்டு ஒரு அரசியல் கட்சியின் பேனர் காற்றில் கழன்று சாலையில் வீசிய போது, இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண் நிலை தடுமாறி விழுந்து லாரி மோதி உயிரிழந்தார். இதை ஒட்டி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். சட்டவிரோதமாக பேனர் வைக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த சில உத்தரவுகளை அரசு செயல்படுத்தவில்லை. இதைச் சுட்டிக் காட்டி டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தார்.

அதையடுத்து கோபமடைந்த நீதிமன்றம், "பேனர்கள் வைக்கப்படுவதைத் தடுக்காத மாநகராட்சி அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா" எனக் கேள்வி எழுப்பியது. தொடர்ந்து, "சட்டம் ஒழுங்கு மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள். ஆளும் கட்சி என்றால் சட்டவிரோதமாக என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?" என்று கோபத்துடன் கேள்வி எழுப்பியது.

சில மாதங்களுக்கு முன் காவல்துறை தலைமை இயக்குநர் மீது ஒரு பெண் காவல்துறை கண்காணிப்பாளர் பாலியல் புகார் கொடுத்தார். இது குறித்து விசாரணைக் குழு விசாரித்தது. இதற்கிடையில், புகார் அளித்த பெண் போலீஸ் அதிகாரி தான் அவ்வாறு புகார் அளிக்காமல் இருப்பதற்காக மிரட்டப்பட்டதாகவும் புகார் கூறினார்.

அது குறித்து விசாரித்த நீதிமன்றம், "அந்த அதிகாரியை ஏன் இன்னும் பணியிடை நீக்கம் செய்யவில்லை" என்று கேள்வி எழுப்பியது. மேலும், "ஒரு காவல் துறை பெண் அதிகாரி்கேக இந்த நிலை என்றால், சாதாராண பெண்களின் நிலைமை என்ன" என்று கோபமாகக் கூறியது.

நீதி தேவதை கண்களைக் கட்டியிருக்கலாம். கைகளில் வாளும் தராசும் ஏந்தியிருக்கலாம். ஆனால், குரல் கம்பீரமானது. தேவைப்படும் நேரத்தில் கோபத்தை வெளிப்படுத்தும் என்பதற்கு இவையெல்லாம் சில உதாரணங்கள்.

திருவள்ளுவர் "வேந்தன் சில சமயம் இப்படிக் கடுமையாக இருந்தாக வேண்டும்" என்று கூறுவதைப் போல், நீதிமன்றமும் இப்படிச் செயல்படும்போது, மக்களுக்கு நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கை வலுப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+