For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செல்வம் தரும் திரு ஆப்புடையார் திருக்கோவில்

Google Oneindia Tamil News

-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்பிரமணியன்

நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இன்று தரிசிக்கவிருப்பது குபேர வாழ்வு தரும் அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயிலாகும்.

மதுரையிலுள்ள பஞ்ச பூத தலங்களில் அப்பு (நீர்-ஜலம்) தத்துவம் கொண்ட சிவ தலம் ஆகும். பாண்டிநாட்டு பாடல் பெற்ற தலம்.

ஸ்தல புராணம்:

சோழாந்தகன் என்ற மன்னன் ஒரு சிவ பக்தன். இவரது ஆட்சி காலத்தில் பருவம் தவறாமல் மழை பொழிந்து விவசாயம் பெருகி மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். இதற்கு காரணம் இவரது சிறந்த சிவபக்தி தான். சிவ பூஜை செய்துவிட்டுதான் சாப்பிடுவார்.

Tiru Aappudayar Temple Madurai

ஒரு சமயம் இவர் காட்டிற்கு வேட்டையாட சென்றார். காட்டில் ஒரு அழகிய மானைப் பார்த்து அதன் அழகில் மயங்கி அதன் அழகில் மயங்கி அதனை துரத்திக் கொண்டு காட்டில் வெகுதூரம் சென்று விட்டார். களைப்பில் மயங்கி விழுந்துவிட்டார். மன்னரின் மயக்கம் தெளிய சிறிது உணவு அருந்துமாறு கூறினர். சிவபூஜை செய்து விட்டு தான் உணவு அருந்துவேன் என்று மறுத்துவிட்டார்.

சமயோசித புத்தி கொண்ட அமைச்சர் அந்த இடத்தில் ஒரு ஆப்பு அடித்துவிட்டு மன்னரிடம் "மன்னா இங்கு ஒரு சுயம்பு லிங்கம் உள்ளது இதை வணங்கி விட்டு சாப்பிடலாமே" என்றார். பசி மயக்கத்திலிருந்த மன்னன் அந்த ஆப்பையே சிவன் என்று நம்பி பூஜை செய்துவிட்டு உணவு உட்கொண்டார். உணவு அருந்திய பின் மயக்கம் நீங்கிய மன்னன் தான் வணங்கியது சிவனை அல்ல அது ஒரு ஆப்பு என்று அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

மன்னன் மிகவும் மனம் வருந்தி இறைவா நான் தவறு செய்துவிட்டேன் இது நாள் வரை நான் உன்னை பூஜித்தது உண்மையென்றால் நீ இந்த ஆப்பில் வந்து அமர்ந்து அருள் பாலிக்க வேண்டும் என்று மன்றாடினான். மன்னனின் பக்தியை மெச்சி மகிழ்ந்த இறைவன் அந்த ஆப்பிலே தோன்றி அருள் பாலித்தார். சிவன் ஆப்புடையார் ஆனார்.

ஆலயத்தின் சிறப்பம்சங்கள்:

பிரம்ம தேவனின் வழியில் வந்த புண்ணிய சேனன் என்பவர் ஒரு சிவபக்தர். இவர் உலகில் உள்ள எல்லா செல்வங்களுக்கும் அதிபதியாவதற்காக அகத்தியரின் ஆலோசனைப்படி இத்தலத்திற்கு வந்து கடும் தவம் இருந்தார். இவரது தவத்தினால் மகிழ்ச்சியடைந்த ஆப்புடையார் தாயார் சுகந்த குந்தளாம்பிகையுடன் தோன்றி புண்ணிய சேனனின் விருப்பத்தை நிறைவேற்றினார்.

உலக செல்வங்களுக்கு அதிபதியாகிவிட்டதால் கர்வம் கொண்டு செயல்பட்டார் புண்ணிய சேனன். இதனால் இவர் பார்வையை இழந்தார். உயிர் கண்டமும் உண்டானது. தன் தவறை உணர்ந்து இறைவனை இறைஞ்சியதால் இறைவனின் கருணையால் மீண்டும் பார்வையை பெற்றார். ஆப்புடையார் இவரை குபேரன் என்று அழைத்து மீண்டும் நல் வாழ்வு தந்தார். அன்று முதல் சங்க நிதி பதும நிதி என்ற இரு செல்வங்களோடு வடக்கு திசையை காத்து வருகிறார் என்று ஸ்தல புராணம் கூறுகிறது.

அசுவமேத யாகத்தின் பலன்

இந்த ஆலயத்தில் சிவ பெருமானை வணங்கிவிட்டு இல்லத்திற்கு செல்லும் ஒவ்வொரு அடிக்கும் அசுவமேதயாகம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த ஆலயத்தில் அம்பாளை வழிபடுவதின் மூலம் திருமணத்தில் உண்டாகும் தடையும் புத்திர பாக்கியத்தில் உண்டாகும் தடையும் நீங்கும்.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் முருகனிடமும், செல்வ வளம் பெருக வெள்ளிக்கிழமையன்று சிவனுக்கு அர்ச்சனை செய்து, பிரார்த்தனை செய்கின்றனர்.

இறைவனுக்கு ஒரு நெய் விளக்கு ஏற்றி வைத்தால் 1000 பசு தானம் செய்த பலனும், இளநீர் அபிஷேகம் செய்தால் 100 அஸ்வமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஆலயத்தின் பெருமைகள்:

சுவாமி சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். மதுரையிலுள்ள பஞ்ச பூத தலங்களில் நீர் (அப்பு-ஜலம்) தத்துவத்தை சார்ந்தது.குபேரன் தோன்றிய தலம்.
இந்திரன் வழிபட்ட தலம்.

தாயாருக்கு சாத்தப்படும் வாசனைமலர்கள் பிறகு எடுத்து பார்த்தால் வாசனை இருக்காது. அம்பாள் மலர்களின் வாசனையை எடுத்துக் கொள்வதாக ஐதீகம்.
சுவாமிக்கும் அம்பாளுக்கும் தனித்தனி கொடிமரம் இந்த தலத்தில் உள்ளது.
இங்கு சுவாமிக்கே முதல் பூஜை.

தேவாரப் பதிகம்

தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத்தலங்களில் இது 2வது தலம்.
பிணியும் பிறப்பறுப்பான் பெருமான் பெருங்காட்டில் துணியி னுடைதாழச் சுடரேந்தி யாடுவான் அணியும் புனலானை யணியாப்ப னூரனைப் பணியும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே. என்று திருஞானசம்பந்தர் பதிகம் பாடியுள்ளார்.
பரஞ்சோதி முனிவரும் பதிகம் பாடியுள்ளனர்.

ஆலய சிறப்பு தகவல்கள்:

மூலவர் : ஆப்புடையார்
பிற பெயர்: கீலகேசுவரர்
பெருமை: சுயம்பு
அம்பாள்: குறவங்குழலம்மை
சிறப்பு: நீர் தலம்
தல விருட்சம்: கொன்றை மரம்
தீர்த்தம்: இடப தீர்த்தம்
பதிகம்: தேவாரம்
புராண பெயர்: ஆப்பனூர்

ஆலயத்திற்கு செல்லும் வழித்தடம்:

மதுரை பெரியார் பேருந்து நிலையம், மாட்டுதாவணி பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம் ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து செல்லூர் வழியாக செல்லும் பேருந்துகள் அனைத்து இத்திருக்கோயிலின் வாசல் அருகில் நின்று செல்லும். பேருந்து நிறுத்தம்: திருவாப்புடையார் கோயில்.

English summary
One day a wedge, or 'aappu', is said to have miraculously transformed into a shivalingam to allow the Pandya King Solandhagan to cross the flooded Vaigai River to reach the Meenakshi Amman Temple, and it is from this event that the Thiru Aappanoor temple takes its name.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X