For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'எனக்கு எதுவும் தெரியாது': முதல்வர் கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான 2வது குற்றப்பத்திரிகையில் தனது மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி ஆகியோர் பெயர் இடம் பெறுமா என்று தனக்கு தெரியாது என்று முதல்வர் கருணாநிதி கூறினார். இது தொடர்பான கேள்வியை எழுப்புவது இதயமற்ற செயல் என்றும் அவர் கூறினார்.

இன்று முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு முதல்வர் அளித்த பதில்களும்:

கேள்வி: முக்கிய கோப்புகளை அழிக்க திமுக அரசு முயற்சி செய்வதாக அதிமுகவினர் சிலர் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு கொடுத்திருக்கிறார்களே?

முதல்வர்: அதிமுகவின் தலைவர்களோ, தளபதிகளோ நான்கைந்து தளபதிகள் ஒரு புகார் எழுதி அரசு தலைமைச் செயலகத்தில் கோப்புகள் எல்லாம் மாற்றப்பட்டும், சிதைக்கப்பட்டும் வருகின்றன, அதை உடனடியாகத் தடுக்க வேண்டுமென்றும், அதைப் பற்றி விசாரிக்க வேண்டுமென்றும் தேர்தல் ஆணையத்திற்கு ஒரு மனு கொடுத்திருக்கிறார்கள். அதில் ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார், வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன் ஆகியோர் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.

அந்த மனுவில் இப்போது நடைபெறுவது காபந்து சர்க்கார் என்று அழுத்தந்திருத்தமாக குறிப்பிட்டிருக்கிறார்கள். நான் பி.எச். பாண்டியனை பெரிய வழக்கறிஞர்களில் ஒருவர் என்று கருதிக் கொண்டிருக்கிறேன். அவருடைய மகன் மனோஜ் பாண்டியனும் அவரை விடத் திறமையான வக்கீல் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்தப் புகார்ப் பட்டியலில் கையெழுத்திட்டுள்ள மனோஜ் பாண்டியன் இந்தச் சர்க்காரை காபந்து சர்க்கார் என்று சொல்லியிருப்பது நகைப்புக்குரியதாகும்.

சட்டக் கல்லூரியின் வாசலைப் பார்த்தவர்கள் கூட காபந்து சர்க்காருக்கும், இப்போது நடைபெறுகின்ற சர்க்காருக்கும் உள்ள வித்தியாசத்தை நிச்சயமாக உணர்வார்கள். இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது தொடர்ச்சியான அரசு தான். தேர்தல் முடிவு வெளி வந்து அதுவரையில் ஆட்சியில் இருக்கிற கட்சி தோற்றுப் போய் வீட்டிற்கு அனுப்பப்படுமேயானால் அடுத்து ஒரு சர்க்கார் அமைவதற்கு முன்பு இடையில் அரசாங்க நிர்வாகத்தில் தடங்கலோ தொய்வோ ஏற்பட்டு விடாமல் புதிய அமைச்சரவை அமைகிற வரையில் கவர்னர் அவர்களால் அனுமதிக்கப்படுகிற அரசுக்குத் தான் காபந்து சர்க்கார் என்று ஒரு கிராம வாசிக்குக் கூடத் தெரியும்.

புதிய தலைமைச் செயலக வளாகம் இன்று நேற்றல்ல. 13-3-2010 அன்றே பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களும், திருமதி சோனியா காந்தி அவர்களும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திறந்து வைக்கப்பட்டதாகும். அதற்குப் பிறகு பட்ஜெட் கூட்டம் இந்தக் கட்டிடத்தில் தான் நடைபெற்றது. ஆளுநர் உரையும் கூட இங்கே தான் நிகழ்த்தப்பட்டது. அதையொட்டிய பொது விவாதமும் இங்கே தான் நடைபெற்றது. 2011ம் ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையும் இந்த வளாகத்தில் தான் படிக்கப்பட்டது. அதற்கான விவாதமும் இங்கே தான் நடைபெற்றது.

இன்று வரையில் இந்தக் கட்டிடத்தில் ஏழு அமைச்சரவைக் கூட்டங்கள் இங்கே நடைபெற்றிருக்கின்றன. திரிபுரா கவர்னர் என்னை வந்து இங்குள்ள முதலமைச்சர் அறையில் சந்தித்து நீண்ட நேரம் உரையாற்றி விட்டுச் சென்றிருக்கிறார். மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், நாராயணசாமி, ஆகியோர் இந்தக் கட்டிடத்திற்கு வருகை தந்திருக்கிறார்கள். தமிழக ஆளுநர் பர்னாலா அவர்கள் ஒரு நாள் முழுவதும் அவர் உடல் நிலையைக் கூடப் பொருள் படுத்தாமல் இந்தக் கட்டிடத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு பாராட்டிச் சென்றிருக்கிறார்.

வீடியோ கான்பரென்ஸ் நிகழ்ச்சிகள் பல குறிப்பாக கால்டுவெல் நினைவில்லத் திறப்பு விழா ஐந்திணை மரபணுப் பூங்காக்கள் திறப்பு விழா மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் நடைபெற்ற விழா தேர்வாணையக் கழகக் கட்டிடக் கால்கோள் விழா போன்றவைகள் இங்கே தான் நடைபெற்றன.

அரசின் பல்வேறு துறைகள் பொதுத் துறை, உள்துறை, பொதுப்பணித் துறை, தொழில் துறை, சட்டப் பேரவைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை போன்றவைகள் எல்லாம் இந்தக் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு இங்கே பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்போது கோப்புகளைத் திருத்துகிறோம் அல்லது திருடுகிறோம் என்றெல்லாம் வழக்கம் போல் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு மக்களைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள். கோப்புகளைப் பற்றியும் அவைகள் எங்களுடைய நிர்வாகத்தில் பாதுகாப்பற்றுப் போய் விடும் என்பது பற்றியும் இந்த மூன்று நான்கு பேருக்கு முன்பே அம்மையார் ஜெயலலிதா அவர்களால் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.

தேர்தல் தொடங்கியது முதல் இந்நாள் வரையில் பல அவதூறுகளை அதிமுகவினர் குறிப்பாக அவர்களுடைய தலைவி ஜெயலலிதாவினால் இந்த அரசின் மீதும், என் மீதும் சுமத்துவதை எவராலும் பொறுத்துக் கொள்ள முடியாது. அதனால் சட்டப் பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்கான முயற்சிகளில் இந்த அரசு ஈடுபட்டிருக்கின்றது.

கேள்வி: காபந்து சர்க்கார் அல்ல, தொடர் அரசு என்று சொல்கிறீர்கள். ஆனால் ஒரு சில அதிகாரிகள் உங்களைக் கேட்காமலேயே தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கிறார்களே, நேற்று கூட பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்தவர்கள், அந்தத் துறையின் அமைச்சரைக் கேட்காமலேயே தேர்வு முடிவு வரும் நாட்களையெல்லாம் அறிவித்திருக்கிறார்களே?

முதல்வர்: அது அதிகாரிக்கும் அமைச்சருக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு. நான் சொன்ன விஷயத்திற்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை.

கேள்வி: அதிமுக கொடுத்துள்ள புகார் குறித்து தேர்தல் ஆணையம் உங்களிடம் விளக்கமோ, தகவலோ கேட்டிருக்கிறதா?

முதல்வர்: தேர்தல் ஆணையத்திற்கு நேற்றிரவு தான் புகார் மனுவை அனுப்பியிருக்கிறார்கள். இன்று காலையில் பத்திரிகைகளில் அந்தச் செய்தி வந்திருக்கிறது. எல்லா பத்திரிகைகளிலும் தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருக்கிறீர்கள். ஏனென்றால் இது உங்களுக்கு மிகவும் சுவையான விஷயம். அதனால் வெளியிட்டிருக்கிறீர்கள். எனவே அதற்காக வழக்கு போடுகிறோம்.

கேள்வி: வழக்கு யார் மீது போடுகிறீர்கள்?

முதல்வர்: எங்கள் சட்ட வல்லுநர்கள் அதைப் படித்துப் பார்த்து விட்டு யார் மீது வழக்கு போடலாம் என்று சொல்கிறார்களோ, அவர்கள் மீது வழக்குப் போடுவோம்.

ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல்:

கேள்வி: இலங்கை பிரச்சினை குறித்து ஐ.நா. நியமித்த விசாரணைக் கமிஷனின் அறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளது. அதற்குள் இது திமுகவிற்கும், அதிமுகவிற்கும் இடையே உள்ள பரஸ்பர விஷயமாகக் கருதப்பட்டு அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றனவே?

முதல்வர்: இலங்கைப் பிரச்சினை பெரிய பிரச்சனை. இதை திமுக பிரச்சனை, அ.தி.மு.க பிரச்சனை என்று கருதி விட்டு விடாதீர்கள். ஏனென்றால் அதிமுக பிரபாகரனை கைது செய்து இங்கே அழைத்து வர வேண்டுமென்று தீர்மானமே சட்டப் பேரவையில் நிறைவேற்றும்.

ஒரு நாள், பிரபாகரனை தியாகி என்று அதிமுக பாராட்டும். இன்னொரு நாளைக்கு இலங்கை அதிபரைத் தாக்கிப் பேசும். ஒரு நாளைக்கு தாங்கிப் பேசும். அதனால் இலங்கைப் பிரச்சினையில் எங்களுக்கும், அதிமுகவிற்கும் கருத்து வேறுபாடு என்று சொல்லாதீர்கள். அவர்களுக்கு இலங்கைப் பிரச்சினை என்ன வென்றே தெரியாது. எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தவரை இலங்கைப் பிரச்சினை அவருக்குத் தெரியும்.

கேள்வி: இந்தச் சூழ்நிலையில் இலங்கைப் பிரச்சனையில் திமுகவிற்கு அதிகப் பொறுப்பு இருக்கிறது. எனவே டெல்லியில் உள்ள காங்கிரஸ் அரசாங்கம் மத்திய அரசு இலங்கைப் பிரச்சினையில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?

முதல்வர்: மத்திய அரசை இலங்கைப் பிரச்சனையில் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம், வற்புறுத்திக் கொண்டிருக்கிறோம். இன்னும் சொல்லப் போனால் எங்கள் அணியில் உள்ளவர்கள் போராட்டமே நடத்தியவர்கள். இலங்கைப் பிரச்சினையிலே சட்ட மன்றத்தில் தீர்மானம் போட்டவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியும். விடுதலைப் புலிகளையெல்லாம் கைது செய்து நீதிமன்றத்திலே நிறுத்த வேண்டு மென்று சொன்னது யார் என்று உங்களுக்குத் தெரியும்.

பிரபாகரனைக் கொண்டு வந்து நிறுத்த வேண்டுமென்று சொன்னது யார் என்று உங்களுக்குத் தெரியும். போர் என்றால் பொது மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான் என்று சொன்னது யார் என்று உங்களுக்குத் தெரியும். இலங்கைப் பிரச்சினையில் நாங்கள் அவர்களை விடத் தீவிரமான ஆதரவாளர்கள். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்களுக்கு திமுகழகத்தைப் பொறுத்த வரையில் தீவிரமான ஆதரவு என்றைக்கும் உண்டு. ஆனால் அவர்கள் தான் எங்களை விட்டு விட்டு வேறு ஆதரவைத் தேடிப் போய் அதனால் நஷ்டம் அடைந்தார்கள். அதற்காக நாங்கள் அவர்களை கை விட்டு விட முடியாது.

மத்திய அரசை வலியுறுத்தி இலங்கைத் தமிழர்களுடைய சுதந்திரத்தைக் காப்பாற்ற அந்தத் தீவில் தமிழர்களும், சிங்களவர்களும் சம உரிமைப் பெற்று வாழ தொடர்ந்து குரல் கொடுப்போம்.

கேள்வி: ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்ற கருத்தினை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். உங்கள் அணியில் டாக்டர் ராமதாஸ் இருக்கிறார். இதிலே உங்கள் கருத்து என்ன?

முதல்வர்: இதிலே டாக்டர் ராமதாஸ் அவர்களின் கருத்திலிருந்து நான் வேறுபடவில்லை. அந்தக் கருத்தை எப்போது எந்தவிதமாக வலியுறுத்துவது என்பது தான் இதிலே முக்கியமே தவிர டாக்டர் ராமதாஸ் அவர்களின் கருத்திலிருந்து நான் வேறுபடுகிறேனா என்று கேட்டு, கருணாநிதியும் ராமதாசும் கருத்து வேறுபாடு என்று தலைப்பு போட்டு விட வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி: ராஜபக்சேவுக்கு ஆதரவான நிலையை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறதே?

முதல்வர்: இவையெல்லாம் சர்வ தேச அளவில் சர்வ தேச நிலையையொட்டி விவாதிக்க வேண்டிய விஷயங்கள். இந்தியாவின் பாதுகாப்பை ஒட்டியும் நல்லுறவு எப்படியெல்லாம் வளர்க்கப்பட வேண்டும் என்பதையொட்டியும் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள். உங்களின் ஒரு கேள்வியிலும், என்னுடைய ஒரு பதிலிலும் இந்த விஷயங்களை அடக்கி விட முடியாது.

மின்பற்றாக்குறைக்கு ஜெ.தான் காரணம்:

கேள்வி: தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறை அதிகமாகிக் கொண்டே போகிறது, சென்னையில் ஒரு மணி நேரம் மின் வெட்டு இருக்கிறதே?

முதல்வர்: மின்சாரப் பற்றாக்குறை இந்தியா முழுவதும் இருக்கிறது.

கேள்வி: மின் பற்றாக்குறைக்கு நீங்கள்தான் காரணம் என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறாரே?

முதல்வர்: அந்த அம்மையார் முன்பு ஐந்தாண்டு காலம் ஆட்சியிலிருந்தபோது, மின்சாரத் துறையில் எதையுமே செய்யாததால்தான் இப்போது இந்த விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி: 2ஜி அலைக்கற்றை வழக்கில் இன்று இரண்டாவது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறதே?

முதல்வர்: தாக்கல் ஆனால் உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். திமுகவினர் மீது ஏதாவது ஒரு தூசி விழுந்தால் கூட, உங்களுக்கு அது தலைப்புச் செய்தியாகி விடுமே! அதற்காக நான் உங்களுடைய பத்திரிகைகளையெல்லாம் படிக்காமல் இருக்கப் போவதில்லை. ஆழ்ந்து படிக்கிறேன்.

கேள்வி: அந்தக் குற்றப்பத்திரிக்கையில் உங்கள் குடும்பத்தினர் பெயர் இடம் பெறும் என்று கூறப்படுகிறதே?

முதல்வர்: அதுபற்றி எனக்குத் தெரியாது.

கேள்வி: குற்றப்பத்திரிக்கையில் உங்கள் குடும்பத்தினரின் பெயர்கள் இடம்பெற்றால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறுமா?

முதல்வர்: பெண்ணாக இருந்துகொண்டு இதுமாதிரிப் பேசக்கூடாது. பெண் நிருபர் இப்படி இதயத்தை தூக்கி எறிந்துவிட்டு பேசக்கூடாது என்றார் கருணாநிதி.

English summary
CM Karunanidhi has warned that govt will sue Jayalalitha and others for bringing disrepute to the DMK govt. He was talking to the reporters in Chennai today. He slammed the media too in his interview.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X