For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வக்கீல்களிடமிருந்து நீதிமன்றங்களை காக்க சிஐஎஸ்எப் பாதுகாப்பு... ஹைகோர்ட் தலைமை நீதிபதி அதிரடி

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை, மதுரை உயர் நீதிமன்றங்களுக்கு மத்திய தொழிலக படை பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) பாதுகாப்பு அளிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

Under threat from lawyers, CJ of Madras High Court seeks CISF protection

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான முதலாவது நீதிமன்றத்துக்குள் நுழைந்து சில வழக்கறிஞர்கள் நேற்று காலை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்,

வாயில் கருப்புத் துணி கட்டியும், கையில் பதாகைகளை ஏந்தியும் அவர்கள் போராடினர். இந்தப் போராட்டத்தில் 2 பெண் வழக்கறிஞர்கள் உட்பட 20க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்தப் போராட்டம் மாலை வரை நீடித்தது.

இதனைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வு தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந் தது. அதன் தொடர்ச்சியாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:-

இன்று காலை 10.30 மணிக்கு வழக்கம்போல நீதிமன்றம் கூடியதும், கோட் அணிந்த வழக்கறிஞர்களும், மற்றவர்களும் குழந்தைகளுடன் வந்து நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க உத்தர விட வேண்டும் என்று கோரினர். இது போல நடக்கப் போகிறது என்று தலைமை நீதிபதி அலுவலகத்துக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், அத்தகைய சூழ்நிலையைத் தடுக்கும்படி காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

ஆனால், நீதிமன்றம் கூடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாகவே வழக்கறிஞர்களும் மற்றவர்களும் முதலாவது நீதிமன்றத்துக்குள் வந்து அமர்ந்துவிட்டனர். அவர்களை காவல்துறையினர் தடுக்க முடிய வில்லை. அப்போது வழக்கறிஞர் முருகன் என்பவர் ஆங்கிலத்திலும், தமிழிலும் பேசும்போது, ‘‘நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்காவிட்டால் போராட்டத்தை கைவிட மாட்டோம்'' என்று மிரட்டும் வகையில் குறிப்பிட்டார்.

இந்தக் கோரிக்கையை இங்கு நிறைவேற்றிக் கொள்ள முடியாது என்று அவரிடம் விளக்கிக் கூறப் பட்டது. அதன்பிறகும் அவர்கள் பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல்முறை அல்ல. இலங்கை மீனவர் பிரச்சினை, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கான பரிந்துரை போன்ற பல காரணங்களுக்காக நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் ஊர்வலமாக செல்வதும், கோஷம் எழுப்புதல் போன்ற சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இதுபோல மதுரை உயர் நீதிமன்ற கிளையிலும் அடிக்கடி போராட்டங்கள் நடந்துள்ளன.

இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்களும், நினைத்த நேரத்தில் நீதிமன்றத்துக்குள் வந்து போவது போன்ற நடைமுறைகள் இப்போதே தடுக்கப்பட்டாக வேண்டும். சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை செய்யும் போது, தாங்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம் என்று நீதிபதிகள் உணரும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும்.

கடந்தகால சம்பவங்களால் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் தயங்குகின்றனர். கடந்த காலத்தில் வழக் கறிஞர்கள் - காவல்துறையினர் இடையே நடந்த மோதல் இத்தகைய சூழலை உருவாக்கி இருக்கிறது. அதனால், நீதிமன்றமும் நீதிபதிகளும் பாதுகாப்பில்லாமல் இருக்கட்டும் என்று விட்டுவிட முடியாது.

நாட்டிலுள்ள அனைத்து உயர்நீதிமன்றங்கள், மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுடன், உயர் நீதிமன்ற வளாகத்தை உயர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், டிஜிபி மற்றும் ஐ.ஜி.களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டி விதிமுறைகள் கொண்ட சுற்றறிக்கையை அனுப்பியிருந்தது. இந்த வழிகாட்டி முறைகளை மாநில அரசு நடைமுறைப்படுத்தவில்லை.

உயர் நீதிமன்ற வளாகத்தை உயர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கும் படி மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க நாங்கள் இனிமேலும் காத்திருக்க முடியாது. பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை நீதிபதி உருவாக்கிய குழுவில் ஜூலை 7-ம் தேதி விவாதிக்கப்பட்டது. அப்போது உயர் நீதிமன்ற பாதுகாப்பில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையை ஈடுபடுத்த வேண்டும் என்றும், அதுகுறித்து மத்திய அரசுக்கு மாநில அரசு மூலம் கடிதம் எழுத வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

எனவே, தற்போதைய சூழ்நிலையில், இவ்வழக்கை தாமாக எடுத்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர், மத்திய உள்துறை அமைச்சக முதன்மைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளையின் பாதுகாப்பை மத்திய தொழில் பாதுகாப்புப் படை அல்லது அது போன்ற அமைப்பிடம் ஒப்படைக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்று நடந்தது போன்ற செயல் களை தடுக்கவும், நீதிமன்றம் இடையூறின்றி செயல்படுவதற்கும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு அவசியம்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டிருந்தது.

பின்னர், இந்த வழக்கு விசாரணை 18ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

மாநில அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சோமையாஜியும், மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலும் இந்த நோட்டீஸை பெற்றுக் கொண்டனர்.

English summary
The Chief Justice of Madras High Court felt so insecure and annoyed at the protest by some lawyers and civilians inside the court premises, that he has suo motu ordered that the state government provide Central Industrial Security Force protection to the court premises.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X