யார் இந்த ஆப்கான் தாலிபான்கள்? இனி பெண் கல்விக்கு தடை- தகாத உறவு எனில் கல்லடி- பொதுவெளியில் தண்டனை
டெல்லி: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல்.. இப்போது தாலிபான்கள் வசமாகிவிட்டது. அமைதியான முறையில் ஆட்சி மாற்றத்தை ஒப்படைக்க வேண்டும் என்கின்றனர் தலிபான்கள். இப்போது அதிபர் அஷ்ரப் கனி பதவி விலகிவிட்டதாக தகவல்கள் வருகின்றன. தாலிபான்கள் கைகளில் ஆட்சி கிடைத்துவிட்டால் கடுமையான இஸ்லாமிய சட்டங்கள்தான் இனி ஆப்கானிஸ்தானில் அமலுக்கு வரும்.
Recommended Video
தாலிபான்கள் யார்? தாலிபான்களின் தலைவர்கள் யார்? என்கிற பூர்வோத்திரத்தை பார்த்தால் சோவியத் ஒன்றியத்தில் பிடியில் ஆப்கானிஸ்தான் இருந்த வரலாற்றில்தான் தொடங்க வேண்டும். பல்வேறு நாடுகளை உள்ளடக்கியதாக இருந்தது சோவியத் யூனியன் அல்லது சோவியத் ஒன்றியம் அல்லது சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம். அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கான நெடுங்காலமாக பனிப் போர்- மறைமுக யுத்தம் நிகழ்ந்தது.
உலக நாடுகள் அமெரிக்கா சார்பு, சோவியத் சார்பு என பிரிந்தும் நின்றன. இந்தியாவைப் போல இரு அணிகளிலும் சேராமல் அணிசேரா கொள்கையை கடைபிடித்த நாடுகளும் இருந்தன. 1978-ல் சோவியத் ஒன்றியத்தின் ஆதரவுடன் ஆப்கானிஸ்தானில் இடதுசாரிகள் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை அமைத்தனர். 1979-ல் இந்த கம்யூனிஸ்ட் அரசும் கவிழ்க்கப்பட்டது. இதனையடுத்து ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த சோவியத் படைகள் அந்நாட்டையே ஆக்கிரமித்தது.

அமெரிக்காவின் முஜாஹிதீன்கள்
அப்போது சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக யுத்தம் நடத்த அமெரிக்காவின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டவர்களே முஜாஹிதீன்கள். சோவியத் ஒன்றியத்துக்கு குடைச்சல் கொடுக்க அமெரிக்கா இஸ்லாமிய தீவிரவாத கோட்பாட்டை உருவாக்கியது. அங்கிருந்துதான் ஜிஹாத், புனிதப் போர் என்கிற இன்றைய அமெரிக்கா உள்ளிட்ட ஒட்டுமொத்த அகிலத்தையும் ஆட்டுவிக்கும் பயங்கரவாத சொற்கள் அங்கிருந்தே பிறப்பெடுத்தன. சோவியத் ஒன்றியத்தின் படைகளுக்கு எதிராக இஸ்லாம் போராளிகள் கொரில்லா தாக்குதலை நடத்தினர். இதனை அமெரிக்கா அப்போது ஊக்குவித்தது. ஆம் அமெரிக்காவுக்கு அப்போது தெரியாது தாம் வெட்டும் பயங்கரவாத புதைகுழியில் தாமே சிக்கி நாசமாவோம் என்பது!

தாலிபான்கள் உருவாக்கம்
10 ஆண்டுகள் சமாளித்துப் பார்த்தது சோவியத் ஒன்றியம்.,, பல்லாயிரம் ராணுவ வீரர்களை பொதுமக்களை பலிகொடுத்தது. ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் ஒன்றியம் வெளியேற வேண்டிய சர்வதேச நெருக்கடியும் ஏற்பட்டது. இதனால் 1988-ல் ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் ஒன்றியம் வெளியேறியது. அப்படி சோவியத் ஒன்றியப் படைகள் வெளியேறிய போது அமெரிக்கா உருவாக்கி வைத்திருந்த இஸ்லாமிய போராளிகளுக்கு இடையே பெரும் மோதல் வெடித்தது. இந்த யுத்தங்களில் 10,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்த யுத்தங்களில் பாகிஸ்தான் ஆதரவுடன் பிறந்ததுதான் உலகை குலைநடுங்க வைக்கும் தாலிபான்கள் அல்லது தலிபான்கள். ஆப்கானிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் நிலை கொண்டிருந்த தாலிபான்களை பாகிஸ்தான் ஆதரித்தது. பாகிஸ்தான் மதராஸாக்களில் படித்தவர்கள் தாலிபான்கள் இயக்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தாலிபான்கள் மெல்ல மெல்ல ஆக்கிரமிப்பை விரிவாக்கம் செய்து 1998-ல் தலைநகர் காபூலை கைப்பற்றினர். அப்போது ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்தவர் புர்ஹானுதீன் ரப்பானி. ஆப்கான் முஜாஹிதீன் என்கிற அமெரிக்கா ஆதரவு அமைப்பின் தலைவர்தான் இந்த ரப்பானி. ரப்பானின் ஆட்சியை வீழ்த்திவிட்டு அதிகாரம் தாலிபான்கள் வசமானது.

தாலிபான்களில் ஆட்சி
தாலிபான்கள் இஸ்லாமிய ஷாரிய சட்டங்களை அமல்படுத்தினர். தொலைக்காட்சி, திரைப்படம், இசை என அனைத்தும் தடை விதித்தனர். ஆண்கள் கட்டாயம் தாடி வளர்க்க வேண்டும்; பெண்கள் கட்டாயம் முகத்தை மூட வேண்டும்; குற்றவாளிகளுக்கு பொதுவெளியில் தண்டனை என தாலிபான்கள் ஆடிய ஆட்டம் உலகை உறைய வைத்தது. 2001-ல் பாமியான் புத்தர் சிலையை தாலிபான்கள் வெடிவைத்து தகர்த்த காட்சிகள் இன்றளவும் ரணமாகவே இருக்கிறது. தாலிபான்கள் அரசாங்கத்தை உலக நாடுகள் அங்கீகரிக்க மறுத்தன. பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமிரேட்ஸ், செளதி அரேபியா ஆகியவை மட்டுமே அங்கீகரித்தன. பாகிஸ்தான் ஆதரவுடன் உருவான தாலிபான்கள், பாகிஸ்தானுக்கும் அச்சுறுத்தலாகவே மாறிப் போயினர். ஆப்கானில் அபின் போதைப் பொருளை தடை செய்ததும் தாலிபான்கள்தான்.

ஒசாமா பின்லேடனும் அல்கொய்தாவும்
தாலிபான்கள் ஆட்சிக் காலத்தில் அல்கொய்தா என்கிற ஒசாமா பின்லேடனின் சர்வதேச பயங்கரவாத இயக்கம் வேர்பிடித்தது. 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி உலகத்தையே அதிர வைத்த அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலை நடத்தியது அல்கொய்தா இயக்கம்தான். அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது விமானங்களை மோத செய்து தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 19 தற்கொலைப்படையினர் நடத்திய இந்த தாக்குதல்களில் சுமார் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களுக்குப் பின்னர் உலகம் பயங்கரவாதம் குறித்து பேசியது. உலக ஒழுங்கு என்பது பெரிய அளவுக்கு மாறிப் போனது. தனிநாடு, சுதந்திரம், விடுதலை யுத்தம் என தேசிய இனங்கள் போராடினாலும் அதுவும் பயங்கரவாத வகைப்பட்டியலில் சிக்கியது. அப்படி சிக்கி சிதைந்துபோன இயக்கங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் ஒன்று.

தலையெடுத்த தாலிபான்கள்
இரட்டை கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் இறங்கின. தாலிபான்கள் அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டு ஜனநாயக முறையிலான அரசு ஆப்கானிஸ்தானில் உருவாக்கப்பட்டது. கடந்த 19 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் ஜனநாயக அரசுகள் ஆட்சியில் இருந்தன. அமெரிக்காவின் நேட்டோ படையும் இங்கே இருந்தது. அமெரிக்காவின் நேட்டோ படைகள் வெளியேறிய நிலையில் இப்போது தலிபான்கள் மீண்டும் தலை எடுத்து தலைநகர் காபூலையும் தம் வசமாக்கிவிட்டனர். இதனால் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி உருவாக இருக்கிறது.

தாலிபான்கள் தலைவர்கள் யார்?
தலிபான்கள் இயக்கத்தை உருவாக்கியது ஒற்றை கண் முல்லா ஒமர். அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் 2016-ல் முல்லா ஒமர் கொல்லப்பட்டார். தற்போது தலிபான்கள் இயக்கத்தின் தலைவராக இருப்பது Haibatullah Akhundzada. அல்கொய்தா இயக்கத்தின் தலைவரான Ayman al-Zawahiri-ன் தீவிர விசுவாசி. முல்லா ஒமரின் மரணத்துக்குப் பின்னர் தாலிபான்கள் இயக்கம் சிதறிப் போகாமல் இருக்கச் செய்தவர் Akhundzada. தாலிபான்கள் தலைவர்களில் முக்கியமானவர் முல்லா பார்தார்- Mullah Baradar. ஒற்றை கண் முல்லா ஒமரின் நெருங்கிய சகாவான பார்தார், 2010-ல் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார். கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்கா தலையீட்டால் விடுதலை செய்யப்பட்டார். தாலிபான்களின் அரசியல் பிரிவு தலைவர்தான் இந்த பார்தார். சோவியத்துக்கு எதிராக அமெரிக்கா ஆதரவுடன் ஆட்சியை பிடித்த ரப்பானியின் மகன் சிராஜூதீன் ஹக்கானி. தாலிபான்கள் இயக்கத்தின் துணைத்தலைவர் ஹக்கானி. அத்துடன் ஹக்கானி நெட்வொர்க் என்கிற பயங்கரவாத இயக்கத்தின் தலைவர். இந்த அமைப்பு அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாகும். ஒற்றைக் கண் முல்லா ஒமரின் மகன் முல்லா யாகூப், தாலிபான்களின் ராணுவ பிரிவு தளபதி. இவர்களின் கட்டுப்பாட்டில்தான் தாலிபான்கள் இயக்கம் இருக்கிறது. இப்போது அமைதி வழியில் ஆட்சிப் பெற முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர் தாலிபான்கள். உலக நாடுகள் அனைத்தும் ஆப்கானிஸ்தான் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து கொண்டும் இருக்கின்றன. தாலிபான்கள் அரசாளப் போகும் இருண்ட காலத்தை நோக்கி ஆப்கானிஸ்தான் தள்ளப்பட்டுவிட்டது!












Click it and Unblock the Notifications