தொழிலாளர் தினத்தை கொண்டாடினால் போதுமா… விவசாயக் கூலிகளுக்கு விடிவு வேண்டாமா?
தொழிலாளர் தினத்தை ஆண்டுதோறும் கொண்டாடிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் விவசாயக் கூலிகளின் வாழ்வில் விடிவுதான் இல்லை என்று நிலையே தமிழகத்தில் நிலவி வருகிறது.
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று மே தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஆனாலும் தமிழகத்தில் விவசாயக் கூலித் தொழிலாளிகளின் நிலை மிக மோசமாகவே இருக்கிறது.
தமிழகத்தில் 100 ஆண்டுகளில் காணாத வறட்சி தற்போது ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் பொய்த்து போய் விவசாயம் நாசமானது.
இந்த வறட்சிக்கு 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பால் மரணம் அடைந்து உயிரிழந்துள்ளனர். நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கே இந்த நிலை என்றால் அவர்களிடம் கூலித் தொழில் செய்யும் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் நிலையை இன்று நாம் சிந்தித்துப் பார்ப்பது அவசியமாகிறது.

வறட்சி போராட்டம்
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி குறித்து விவசாயிகள் அன்றாடம் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு வறட்சி மாநிலமாக தமிழகத்தை அறிவித்தது. மேலும் வறட்சி நிவாரணத்தையும் அறிவித்தது.

நிவாரணம்
ஆனால், இதில் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிப்பது குறித்து எந்த வித குறிப்பும் இல்லை. இது அனைத்துக் கட்சித் தலைவர்களாலும், விவசாய சங்கங்களாலும் கண்டனம் செய்த போதும் தமிழக அரசு கண்டு கொள்ளவே இல்லை.

இன்னல்
பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு அரசு அறிவித்த இழப்பீட்டுத் தொகையே விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லாத போது, விவசாயக் கூலிகளைப் பற்றி தமிழக எங்கே அக்கறை எடுத்துக் கொள்ளப் போகிறது. அரசின் அக்கறையின்மையால் விவசாயக் கூலிகள் தொடர்ந்து இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

நஷ்டஈடு
ஈரோடு மாவட்டம் கீழ்பவானி, காலிங்கராயன் ஆகிய பகுதிகளில் உள்ள பாசனப் பகுதிகள் முழுவதும் வறண்டு பாலைவனமாகிவிட்டது. விவசாய நிலங்கள் அவ்வளவும் காய்ந்து வெடித்துக் கிடக்கின்றன. இதனால் விவசாயக் கூலித் தொழிலை மட்டுமே நம்பியிருந்த மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலையில்லாமல் நஷ்ட ஈடு கேட்டு அன்றாடம் போராடி வருகின்றனர்.

மனு
நிலம் உள்ள விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டு வரும் குறைந்தபட்ச வறட்சி நிவாரணத் தொகையை அரசு வழங்கி வருவது போல் தங்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகங்களில் விவசாயக் கூலித் தொழிலாளர் மனு கொடுக்காத நாள் இல்லை என்றே சொல்லாம்.

மரியாதை
நிலமில்லாத விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வேலையிழந்து மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ள இந்த நிலையில், குறைந்தபட்சம் அவர்களுக்கான நிவாரணத் தொகையாவது அறிவிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். அப்போதுதான் தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவது சடங்காக மாறாமல் உண்மையில் மரியாதைக்குரிய நாளாக மாறும்.












Click it and Unblock the Notifications