அதிமுக மாஜிக்கள் விஜயபாஸ்கர், ரமணா 'தலைக்கு மேல் தொங்கும் கத்தி' குட்கா வழக்கு கடந்து வந்த பாதை!
சென்னை: அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், தங்கமணி, கே.சி.வீரமணி என பலரும் ஊழல் முறைகேடு வழக்குகளில் சிக்கி உள்ளனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு விவகாரத்தில் முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரது தலைகளும் உருளுகின்றன. இப்போது அதிமுக அரசை கிடுகிடுக்க வைத்த குட்கா லஞ்ச வழக்கும் விஸ்வரூபமெடுத்துள்ளது.
அதிமுகவை கலங்கடிக்கும் குட்கா ஊழல் வழக்கு கடந்து வந்த பாதையை பார்ப்போம். நாடு முழுவதும் குட்கா விற்பனைக்கு 2010-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடையை மீறி பல மாநிலங்களில் குட்கா விற்பனை அமோகமாக நடைபெற்றது. இதன் மூலம் பல நூறு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

2016-ம் ஆண்டு ரூ100 கோடி வரி ஏய்ப்பு தொடர்பாக சென்னையில் குட்கா வியாபாரிகள் வீடுகள், குடோன்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் குட்கா வியாபாரி மாதவராவின் டைரி சிக்கியது. மாதவராவின் டைரியில் தடையை மீறி குட்கா விற்பனை செய்ய ரூ40 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்ட விவரம் எழுதப்பட்டிருந்தது.
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய டிஜிபி ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ் ஆகியோருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதும் அதில் இருந்தது. 2017-ல் குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கியவர்கள் குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை தமிழக அரசுக்கு வருமான வரித்துறை அனுப்பி வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது.
தடையை மீறி குட்கா விற்பனை செய்யப்படுவதாக சட்டசபையில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.ஸ்டாலின் புகார் தெரிவித்தார். அப்போது குட்கா பொட்டலங்களை ஸ்டாலின் சட்டசபையில் எடுத்து காட்டினார். இதைத் தொடர்ந்து ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு முன்னாள் சபாநாயகர் தனபால் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் வருமான வரித்துறை அறிக்கை மீது சிபிஐ விசாரணை நடத்த அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் அதிமுக அரசோ, மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிராக குட்கா லஞ்ச வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ.வாக இருந்த மறைந்த ஜெ. அன்பழகன் வழக்கு தொடர்ந்தார். குட்கா ஊழல் தொடர்பான வருமான வரித்துறை அறிக்கை திடீரென மாயமானதாக புதிய சர்ச்சை எழுந்தது. மாயமான இந்த அறிக்கை 2018 ஜனவரியில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களாவில் சசிகலா அறையில் வருமான வரி சோதனையின் போது கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
குட்கா ஊழல் வழக்கை விசாரித்த லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் மஞ்சுநாதா திடீரென இடம் மாற்றம் செய்யப்பட்டார். மேலும் விஜயபாஸ்கர், போலீஸ் அதிகாரிகள் ராஜேந்திரன், ஜார்ஜ்ஜை தப்ப வைக்கவே மஞ்சுநாதா இடம் மாற்றம் செய்யப்பட்டதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த நிலையில் 2018-ல் குட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவை பிறப்பித்தது. சி.பி.ஐ விசாரணையைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவும் குட்கா லஞ்ச வழக்கை கையில் எடுத்து வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கில் கடந்த ஜனவரியில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மற்றும் 26 அதிகாரிகள், 3 நிறுவனங்கள் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. மேலும் அதில் 2013-ம் ஆண்டு முதல் 2016 ஜூன் மாதம் வரை சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்ததன் மூலம் ரூ639 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே சென்னை மாநகர மாஜி கமிஷனர் 2018-ல் சென்னையில் ஒரு பேட்டி அளித்து பெரும் பரபரப்பை கிளப்பினார். அந்த பேட்டியில் சென்னையில் 300 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இவ்வளவு பெரிய முறைகேடு யாருக்கும் தெரியாமல் நடந்திருக்குமா. கமிஷனர் அனுமதியோடு மட்டும் இப்படி குட்கா முறைகேடு நடந்திருக்க முடியுமா? எனது உயர் அதிகாரிகள் என்னை பற்றி நல்ல ரிப்போர்ட் கொடுத்துள்ளனர். 'அப்ரைசல்' கடிதங்களில் நான் கடினமானவன் என்று உயர் அதிகாரிகள் கூறியுள்ளனரே தவிர நான் திறமையானவன் என்பதை அவர்கள் குறிப்பிட தயங்கவில்லை. நான் ஆணையராக வந்தபோது குட்கா தொடர்பான வதந்திகள் பரப்பப்பட்டன. ஆணையராக இருந்தபோது குட்கா தொடர்பாக விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கையளித்தேன். உரிய விசாரணை நடத்த அரசுக்கு பரிந்துரைத்தது நான்தான். துணை ஆணையர் ஜெயக்குமாருக்கு பல பொறுப்புகளை கொடுத்தேன். ஆனால் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. உயர் அதிகாரிகளிடம் அவர் முறைகேடு குறித்து சரியாக ரிப்போர்ட் அளிக்கவில்லை. எனவே, பணி விவர அறிக்கையில் ஜெயக்குமாருக்கு எதிரான அறிக்கையை கொடுத்தேன். குட்கா விஷயத்தில் என்னை குறி வைத்து, செயல்படுவது வருத்தமாக உள்ளது. நான் டிஜிபியாக பதவிக்கு வர வேண்டிய நேரத்தில்தான் வதந்தி பரப்பப்பட்டது என கூறினார். மேலும் குட்கா முறைகேடே நடக்கவில்லை என்றும் கூற முடியாது. நடந்துள்ளது என்றும் ஜார்ஜ் தெரிவித்தார். ஜார்ஜ் அப்போது குற்றம்சாட்டிய ஜெயக்குமார்தான் இப்போது தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரவி முன்னிலையில் நடைபெற்று வந்தது. இன்றைய விசாரணையின் போது மாஜி அமைச்சர் ரமணா உள்ளிட்ட 27 பேருக்கு அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. மாஜி அமைச்சர் ரமணா உள்ளிட்டோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். இன்றைய விசாரணையின் போது ஆஜராகாத கொடுங்கையூர் சீனிவாசனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை வரும் 21-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications