பெங்களூர்: தமிழகத்திற்கு அளவுக்கு அதிகமாகவே தண்ணீர் திறந்துவிட்டுள்ளோம். இனியும் தண்ணீர் திறந்தால் கர்நாடகாவில் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும். எனவே தமிழகத்திற்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட அனுமதிக்குமாறு காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு கோரிக்கை அளித்துள்ளது. நாளை காவிரி மேலாண்மை ஆணையத்தின் 56-வது கூட்டம் நடக்கும் நிலையில் கர்நாடக அரசு இந்த கோரிக்கையினை அளித்துள்ளது.
காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்வதில் தமிழகத்திற்கும், கர்நாடகாவுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சனை நிலவுகிறது. காவிரி நதி நீர் பங்கீட்டுக்காக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படுள்ளது. இந்த ஆணையத்தின் 56-வது கூட்டம் கடந்த மாதம் 25 ஆம் தேதி நடைபெற்றது.
அப்போது தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் என 15 நாட்களுக்கு மொத்தம் 11.66 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. ஆனால், கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இல்லை எனக்கோரி மேலாண்மை ஆணைய உத்தரவை முறைப்படி செயல்படுத்த மறுத்து வருகிறது. இந்த நிலையில், கர்நாடகா தரப்பில் கூடுதல் மனு மேலாண்மை ஆணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், தற்போதைய நிலவரப்படி 9 ஆயிரம் கன அடி வீதம் தமிழ்நட்டுக்கு தண்ணீர் கொடுத்தால் கர்நாடகாவில் குடிநீர் வினியோகம் கடும் சிரமங்களை சந்திக்க கூடும் என கர்நாடக அரசு தெரிவித்தது. கேஆர் எஸ் அணையில் 26.13 டிஎம்சி தண்ணீரும் கபினி அணையில் 10.12 டிஎம்சி தண்ணீரும் இருப்பு உள்ளது. இதனால், வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பது சரியாக இருக்காது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் கடந்த ஜூலை மாதம் 29 முதல் செப்டம்பர் 4 ஆம் தேதி வரையிலான கால கட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தேவைக்கு அதிகமான அளவு அதாவது 28.30 டிஎம்சி தண்ணீரை திறந்து விட்டு இருப்பதாகவும் கர்நாடக அரசு தெரிவித்தது. எனவே தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தது. காவிரி மேலாண்மை ஆணையம் நாளை கூட உள்ள நிலையில், கர்நாடகா இந்த மனுவை அளித்துள்ளது. நாளை நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், இரு மாநில அதிகாரிகளும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதில் கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் நீர்ப்பாசன சூழ்நிலைகள் ஆலோசிக்கப்பட்டு உரிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் கூட உள்ளதையொட்டி காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் முன்னதாக கூடி, இரு மாநிலங்களின் நீர் இருப்பு விவரங்களையும், மழை விவரங்களையும் மதிப்பிடும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.