அடங்காத கூட்டம்.. விநாயகர் ஊர்வலத்தில் 30 பெண்களுக்கு பாலியல் தொல்லை.. ஷாக்

  • பெங்களூர்: கர்நாடகாவில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் அலைமோதிய கூட்டத்தை பயன்படுத்தி 30க்கும் அதிகமான பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது. கூட்டத்தில் அலறிய பெண்களால் போலீசார் தடியடி நடத்தி அனைவரையும் கலைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் கர்நாடகாவின் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நேற்று இரவு விநாயகர் ஊர்வலம் நடந்தது.

    Advertisement

    மகாராஷ்டிரா மக்கள் அதிகம் வசிக்கும் மராட்டா பகுதி, மேதார் ஓணி, கலால் ஓணி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மொத்தம் 3 விநாயகர் சிலைகள் நேற்று இரவு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இந்த 3 விநாயகர் ஊர்வலமும் ஒரே நேரத்தில சிபிடி பகுதிக்கு சென்றது.

    இரவு 9.30 மணியளவில் 3 விநாயகர் சிலைகளும் ஒரே இடத்தில் சந்தித்தால் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டனர். டிஜே மூலம் பாடல்கள் ஒலிக்கப்பட்டு பலரும் ஆடிப்பாடினர். ஒரு கட்டத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது. இதனால் கூட்ட நெரிசல் ஏற்படும் நிலை உருவானது. பொதுமக்கள் ஒருவரையொரும் இடித்து கொண்டு நின்றனர்.

    Advertisement

    இந்த சமயத்தில் சிலர் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதில் அதிர்ச்சியடைந்த பெண்கள் கூச்சலிட்டனர். தங்களின் குடும்பத்தினரிடம் கூறி கதறினர். மேலும் பெண்களிடம் தவறாக நடந்த நபர்களை பிடித்து தாக்க முயன்றனர். இதனால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வன்முறை நிகழும் நிலை வந்தது. பாதுகாப்புக்காக நின்ற போலீசார் இருதரப்பையும் தடுக்க முயன்றனர்.

    ஆனால் நிலைமை கட்டுக்குள் வரவில்லை. இதனால் வேறு வழியின்றி போலீசார் தடியடி நடத்த தொடங்கினர். இதனால் அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். பெண்களை போலீசார் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றினர். பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசரணையை தொடங்கி உள்ளனர்.

    Advertisement

    இதுபற்றி உப்பள்ளி -தார்வார் காவல் ஆணையர் போரஷ் பூஷண் குலப்ரோ அளித்த பேட்டியில், 'ஒரே நேரத்தில் சி.பி.டி. சாலைக்கு 3 பகுதிகளில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலம் வந்ததால் கூட்டம் அதிகரித்தது. பெண்களுக்கு சிலர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுவரை 30 பெண்கள் புகாரளித்துள்ளனர். சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். மர்மநபர்களை விரைவில் கைது செய்ய உள்ளோம்'' என்றார்.

    English Summary

    An incident has occurred in Karnataka where more than 30 women were sexually harassed by individuals taking advantage of the surging crowds during a Vinayaka idol procession. The situation caused a major stir, prompting the police to resort to a lathi-charge to disperse the crowd after women raised alarms.