தங்கத்தின் விலையில் ஆட்டமே இனிதான்.. 53% ஏறியதே, 30% இன்னும் ஏறுமா? உலக தங்க கவுன்சில் தந்த கணிப்பு
சென்னை: இப்போது இந்தியா மட்டுமல்ல உலகமெங்கும் பேசுபொருளாகி இருப்பது தங்கத்தின் விலைதான்... விலையை கேட்டாலே ஏழை, எளிய மக்கள் வெலவெலத்து போகிறார்கள்,.. வரக்கூடிய ஆண்டுகளிலாவது தங்கத்தின் விலை எப்படி இருக்கும்? ஏறுமா? இறங்குமா? என்று பல சந்தேகங்கள் பொதுமக்களிடம் வலம் வந்து கொண்டே உள்ளன.. இப்படிப்பட்ட சூழலில்தான், உலக தங்க கவுன்சில் ஒரு பரபரப்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.. அதை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
உலக தங்க கவுன்சில் ரிப்போர்ட்படி, "வரும் 2026ம் ஆண்டுக்குள் இப்போதிருப்பதைவிட 15% முதல் 30% வரைக்கும் தங்கத்தின் விலை அதிகமாக ஏறிவிட வாய்ப்புள்ளது.. இதற்கு காரணம், உலகத்தின் பல மூலைகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதும், அரசியல் பதற்றங்கள் நீடிப்பதும்தான்.

உலக தங்க கவுன்சில் சர்ப்ரைஸ் கணிப்பு
இஸ்ரேல் - மத்திய கிழக்கு மோதல்கள், ரஷ்யா - உக்ரைன் போர், சீனா - அமெரிக்கா பதற்றம் என்று இப்படி உலகின் பல பகுதிகளில் அமைதியற்ற சூழல் நிலவி கொண்டிருக்கிறது.. இப்படியான நேரங்களில், மக்கள் பங்குச்சந்தை போன்ற ஆபத்தான முதலீடுகளில் பணம் போட தயங்குவார்கள்... அதற்கு பதிலாக தங்கத்தில் போட்டால் பத்திரமாக இருக்கும் என்று மக்கள் நம்புவதும், தங்கத்தின் விலையை அதிகரிக்க செய்துவிடும்.
அதுமட்டுமல்ல, உலகின் பெரிய பெரிய மத்திய வங்கிகளே இந்த காலகட்டத்தில் தங்கத்தை பெரிய அளவில் வாங்கி குவித்து வருகின்றன...
அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் கையிருப்பில் தங்கத்தின் அளவை அதிகரித்து கொண்டிருப்பதும், தங்கத்தின் விலையை மேலும் உயர்த்தும் இன்னொரு காரணியாக பார்க்கப்படுகிறது...
தங்கம் - முதலீட்டு திட்டங்கள்
அதேபோல தங்க ETF போன்ற முதலீட்டு திட்டங்களிலும் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதால், சந்தையில் தங்கத்துக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அத்துடன், வட்டி விகிதம் தொடர்பான அறிவிப்புகளும், மத்திய வங்கிகளின் தங்க கொள்முதலும் சேர்ந்து, தங்கத்தின் விலையை உச்சிக்கே கொண்டுபோய்விட்டன.
மத்திய வங்கிகளின் தங்க கொள்முதல் மற்றும் வட்டி விகித அறிவிப்புகளும், தங்கத்தின் விலை உயர காரணமாக அமைந்தன.. இவ்வளவு காரணங்களும் இருப்பதால்தான், இதுவரை தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 53 சதவீதம் உயர்ந்துள்ளது.
20 சதவீதம் சரியுமா?
ஆனால் இதே நிலைமை அடுத்த வருடமும் நீடிக்காது.. ஏனென்றால், தங்கத்தின் விலை, வரும் ஆண்டில் 5 முதல் 20 சதவீதம் வரை சரியவும் வாய்ப்புள்ளது...
அமெரிக்காவில் டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகள் பெரிய அளவில் வெற்றி பெற்று, அந்நாட்டின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ச்சி அடைந்தால், பணவீக்கம் அதிகரிக்கும் நிலை ஏற்படலாம். அப்படி நடந்தால், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தும் கட்டாயத்திற்கு தள்ளப்படும்.
ஏறலாம் - இறங்கலாம்
வட்டி விகிதம் உயர்ந்தால் என்ன நடக்கும்? டாலரின் மதிப்பு பலம் பெறும்... டாலர் வலுப்பெற்றால், பொதுவாக தங்கத்தின் விலை சரியும்.. அப்போது முதலீட்டாளர்கள் தங்கத்தில் இருந்து தங்கள் பணத்தை எடுத்து கொண்டு, அதிக லாபம் தரும் பங்குச்சந்தை உள்ளிட்ட மற்ற முதலீடுகளுக்கு செல்ல வாய்ப்பு அதிகமாக இருக்கும்.. இதனால், தங்கத்தின் விலை ஒரேயடியாக கீழே இறங்க தொடங்கும்.
ஆக, தங்கத்தின் நிலை ஏறவும் வாய்ப்புள்ளது, இறங்கவும் வாய்ப்புள்ளது என்பதால், தங்கத்தை வாங்குபோது கவனமாக செயல்பட வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.












Click it and Unblock the Notifications