நள்ளிரவு போன்.. கண் முன்னே பறிபோன கட்சி.. கலங்கிய எடப்பாடி! - சிவி.சண்முகம் ஸ்கெட்ச் போட்டது எப்படி?
சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலை எப்போதுமே அமைதியாகத்தான் இருக்கும். ஆனால், கடந்த இரண்டு நாள் இரவு அங்கு நிலவிய அமைதி, ஒரு பெரும் புயலுக்கான அறிகுறி என்பதை எடப்பாடி பழனிசாமியின் உளவுப்படை மோப்பம் பிடிக்கத் தவறிவிட்டது. இன்று சட்டப்பேரவையில் நடக்கவிருக்கும் அந்த அக்னிப் பரீட்சைக்கு முன்னால், நேற்றிரவு அரங்கேறிய 'ஆபரேஷன் வி' (Operation V) தான் இப்போது தமிழக அரசியலின் ஹாட் டாக்!
நள்ளிரவு 11:30 - அந்த முதல் அழைப்பு!
இரண்டு நாட்களுக்கு முன்.. இரவு சரியாக 11:30 மணி. கோயம்புத்தூரில் இருந்த ஒரு முக்கியப் புள்ளியின் செல்போனுக்கு சென்னையில் இருந்து அந்த அழைப்பு சென்றது. அழைத்தது வேறு யாருமல்ல, வட மாவட்டங்களின் 'வாள்' என்று வர்ணிக்கப்படும் சி.வி.சண்முகம். மறுமுனையில் பேசியது கொங்கு மண்டலத்தின் நாயகன் எஸ்.பி. வேலுமணி.

"என்னண்ணே... இப்படியே போனா நாமளும் காணாம போயிடுவோம், கட்சியும் காணாம போயிடும் போல இருக்கே?" - சண்முகத்தின் குரலில் இருந்த அந்த ஆதங்கம், வேலுமணியையும் யோசிக்க வைத்தது. சேலத்துத் தலைமை எடுத்து வரும் தன்னிச்சையான முடிவுகள், சீனியர்களைச் சுத்தமாக மதிக்காத போக்கு என இருவரும் கொட்டித் தீர்த்தார்கள்.
அதிகாலை 2:00 - ஸ்கெட்ச் போட்ட 'சிக்னல்'!
அடுத்த இரண்டு மணி நேரம், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்த எம்.எல்.ஏ-க்களுக்கு ரகசியத் தகவல்கள் பறந்தன. "எடப்பாடியை நம்பிப் பிரயோஜனம் இல்லை, புதிய மாற்றத்தை ஏற்போம்" என்கிற ஒற்றை வரிச் செய்திதான் பாஸ்வேர்ட். இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஈ.பி.எஸ்-ஸின் நிழலாகக் கருதப்பட்ட சில விசுவாசிகளுக்கே சண்முகம் வலை வீசியதுதான்.
அதிகாலை 2 மணி அளவில், அந்த மெகா டீல் ரகசியமாக உறுதி செய்யப்பட்டது. அதாவது, நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பது. இதற்குப் பதிலாக, தங்கள் மாவட்டங்களில் தங்களுக்கு இருந்த 'பவர்' குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற உத்தரவாதம் 'மேலிடத்தில்' இருந்து பெறப்பட்டது.
யார் அந்த 'பிக் ஹெட்ஸ்'?
இந்த ஆபரேஷனுக்குப் பின்னால் வெறும் சண்முகமும் வேலுமணியும் மட்டும் இல்லை. டெல்லியில் செல்வாக்கு மிக்க ஒரு தொழிலதிபர் மற்றும் தமிழகத்தின் பெரும் பொருளாதார பின்னணி கொண்ட ஒரு முக்கியப் புள்ளி ஆகியோர்தான் இந்த வேலைகளைச் செய்ததாகக் கூறப்படுகிறது. "அதிமுக உடைந்தால் மட்டுமே தவெக (TVK) நிலையான ஆட்சி தர முடியும்," என்கிற அடிப்படையில் அந்த தலைகள் காய்களை நகர்த்தி உள்ளனர்.
தங்கள் அரசியல் எதிர்காலத்தைக் காப்பாற்றிக்கொள்ளவும், எடப்பாடியின் பிடியிலிருந்து விடுபடவும் இதுவே சரியான தருணம் என அவர்கள் முடிவெடுத்தனர்.
காலை 5:00 - டீல் ஓகே!
இரண்டு நாட்களுக்கு முன் விடிந்தும் விடியாத காலை 5 மணிக்கு, ஒரு மெசேஜிங் ஆப் மூலம் "சிக்னல் கிரீன்" (Signal Green) என்கிற செய்தி பரிமாறப்பட்டது. இதன் பொருள், 30 எம்.எல்.ஏ-க்கள் இப்போதே தயார் என்பதுதான்.
நேற்று காலை எடப்பாடி பழனிசாமி கண் விழித்தபோது, அவருக்கு வந்த முதல் தகவல் "கட்சி உடைந்துவிட்டது" என்பதுதான். நேற்று அதை செய்தியாளர் சந்திப்பில் காலை 10 மணி அளவில் சிவி சண்முகம் உறுதி செய்தார். கொறடா உத்தரவு, தகுதி நீக்க மிரட்டல் என அனைத்தையும் மீறி, சண்முகமும் வேலுமணியும் போட்ட அந்த நள்ளிரவு ஸ்கெட்ச், இன்று சட்டப்பேரவையில் ஒரு பெரும் அரசியல் மாற்றத்திற்கு அச்சாரமாக அமையப்போகிறது.
யார் யாருக்கு அல்வா கொடுத்தார்கள்? யார் யாருக்கு ஸ்கெட்ச் போட்டார்கள்? என்பதற்கான விடை இன்று தெரியும்.. அதிமுக எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது வரும் காலங்களில்தான் தெரியும்!












Click it and Unblock the Notifications