சென்னை: இந்தியாவில் கியாஸ் தட்டுப்பாடு, நேபாளத்தில் ஆட்சி கவிழ்ப்பு, பிரான்ஸில் தற்போது நடக்கும் வன்முறை உள்ளிட்டவை துல்லியமாக கணித்த பிரபல ஜோதிடர் பிரசாந்த் கினி தற்போது தமிழக அரசியல் பற்றிய கணிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி ''தமிழக அரசியலில் முதல்வர் விஜய் போல் உடனடியாக நடிகர் தனுஷால் வெற்றி பெற முடியாது. விஜய்யை போல் உடனடி வெற்றி பெறக்கூடிய ஒரு நபர் உண்டு என்றால் அது நடிகர் அஜித் குமார் மட்டும் தான். அவர் 2032ல் அரசியலுக்கு என்ட்ரி கொடுப்பார். அவர் தான் அதிமுகவிற்கு புத்துயிர் அளிப்பார்'' என்று கூறி கவனத்தை ஈர்த்துள்ளார்.
தமிழகத்தில் நடிகர்கள் அடுத்தடுத்து அரசியலில் குதித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருந்த விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி முதல்வராகி உள்ளார். இவர் பாணியில் அடுத்து நடிகர் தனுஷ் அரசியலில் களமிறங்கலாம் என்று சொல்லப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றங்களை, நற்பணி இயக்கமாக மாற்றி உள்ளார். இதற்கான கொடி மற்றும் லோகோ வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி நடிகர் தனுஷ் திடீரென்று டெல்லி பயணத்தையும் மேற்கொண்டுள்ளது அவரது அரசியலுக்குள் நுழைவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான் தமிழகத்தில் நடிகர்களின் அரசியல் வருகை பற்றி பிரபல ஜோதிடர் பிரசாந்த் கினி கணிப்புகளை வெளியிட்டுள்ளார். தனுஷ் மட்டுமின்றி நடிகர் அஜித்குமாரின் அரசியல் வருகை பற்றி பிரபல ஜோதிடர் பிரசாந்த் கினி கணிப்புகளை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: ''நடிகர் விஜய் போல், நடிகர் தனுஷ்க்கு அரசியலில் உடனடியாக வெற்றியை பெற முடியாது. விஜய்க்கு கிடைத்ததுபோன்ற உடனடி வெற்றியை அரசியலில் பெறக்கூடிய ஒரே தமிழ் சூப்பர் ஸ்டார் அஜித் தான்'' என்று கூறியுள்ளார். அதேபோல் இன்னொரு பதிவில், ''2032ம் ஆண்டில் அஜித் அரசியலுக்கு என்ட்ரி கொடுப்பார். அவர் தான் அதிமுகவிற்கு புத்துயிர் அளிப்பார். அதுவரை அதிமுகவிற்கு பெரிய வெற்றி எதுவும் கிடைக்காது'' என்று கணித்துள்ளார். இந்த கணிப்புகளை வெளியிட்டுள் பிரசாந்த் கினி சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம். இவர் இந்தியாவில் மாநிலங்கள் வாரியாகவும், வெளிநாடுகள் தொடர்பாகவும் தொடர்ந்து கணிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதில் பல கணிப்புகள் துல்லியமாக நடந்துள்ளன. உதாரணமாக தற்போது பிரான்ஸ் நாட்டில் வன்முறைகள் நடந்து வருகிறது. இந்த வன்முறையின் பின்னணியில் வெளிநாட்டில் இருந்து பிரான்ஸ்க்குள் குடியேறியவர்கள் தான் காரணம் என சொல்லப்படுகிறது. குறிப்பாக டொனால்ட் டிரம்ப் இதில் உறுதியாக உள்ளதோடு, இஸ்லாமியர்களும் காரணம் என்று பகீர் கிளப்பி உள்ளார். இதுபற்றி கடந்த 2025 மே 28 ம் தேதியே பிரசாந்த் கினி கணிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், ''பிரான்ஸ் எதிர்க்காலத்தில் ரேடிக்கல் இஸ்லாமிஸ்ட் வன்முறையையும், பயங்கரவாத தாக்குதல்களையும் எதிர்கொள்ளும்'' என்று கணித்து இருந்தார். தற்போது பிரான்ஸில் வன்முறை நடந்து வருகிறது. அதற்கு முன்பாக கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி நேபாளம் பற்றிய கணிப்பை வெளியிட்டு இருந்தார். அதில் ''நேபாளம் பற்றிய என்னுடைய கணிப்புகள். நேபாளத்தில் ஜனநாயகம் முடிவுக்கு வரும். 2025ம் ஆண்டில் மன்னராட்சி மீண்டும் வரும்'' என்று கூறியிருந்தார். கடந்த ஆண்டு இறுதியில் நேபாளத்தில் 'ஜென்-ஸி' போராட்டத்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மேலும் 2025 செப்டம்பர் 27 ம் தேதி வெளியிட்ட பதிவில், ''2026 மார்ச் மாதத்திற்கு பிறகு இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும்'' என்று கூறியிருந்தார். இதுவும் பலித்தது. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போரை தொடங்கியது. அதன்பிறகு ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்தது. இதனால் நம் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய கச்சா எண்ணெய் சப்ளையில், கியாஸ் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டது. இப்படியாக ஜோதிடர் பிரசாந்த் கினியின் பல கணிப்புகள் அப்படியே பலித்துள்ளது. இதனால் நடிகர் அஜித் குமார் மற்றும் நடிகர் தனுஷ் தொடர்பான கணிப்புகள் பலிக்குமா? இல்லையா? என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.