முன்னாள் காதலி இப்போது யாரை காதலிக்கிறார்? 97 RTI மனுக்கள்.. விழுப்புரம் இளைஞருக்கு அதிரடி தடை
விழுப்புரம்: தனது முன்னாள் காதலி இப்போது யாரை காதலிக்கிறார்? இதற்கு முன்பு எத்தனை பேரைக் காதலித்துள்ளார்? என்பது உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களையெல்லாம், தகவல் அறியும் உரிமை சட்டம் அதாவது ஆர்டிஐ-யிடம் கேட்டாராம் ஒரு இளைஞர்.. அதுவும், 97 மனுக்களை தாக்கல் செய்து, இந்த கேள்விகளையெல்லாம் கேட்டுள்ளார்.. இப்போது அந்த இளைஞருக்கு மாநில தகவல் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் அதிரடியான ஒரு உத்தரவையும் அந்த இளைஞருக்கு பிறப்பித்திருக்கிறது. அது என்ன தெரியுமா?
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் கடந்த 2021 முதல் 2024-ம் வருடம் வரை கல்லூரியில் படித்து வந்துள்ளார். அப்போது, அதே காலேஜில் படித்த பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்..

விழுப்புரம் முன்னாள் காதலி
ஆனால், சந்தோஷின் நடத்தையால் அந்த பெண் அவரிடமிருந்து விலகி சென்றதாகத் தெரிகிறது. இருந்தாலும், சந்தோஷ் தொடர்ந்து அந்தப் பெண்ணுடன் தொடர்புகொள்ள முயற்சி செய்துள்ளார். தன்னை விட்டு போகக்கூடாது என்று செல்போன் மெசேஜ் மூலமும், கடிதங்கள் மூலமாகவும் பல டார்ச்சர்களை அந்த பெண்ணுக்கு தந்து வந்துள்ளார்..
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண் ஒரு கட்டத்தில் தற்கொலைக்கே முயன்றாராம்.. அதற்கு பிறகு அந்த பெண் எங்கே போனார்? என்ன ஆனார் என்று தெரியவில்லை..
மொத்தம் 1886 கேள்விகள்
இந்நிலையில், அந்தப் பெண்ணை பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ள சந்தோஷ் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தியுள்ளார். அதன்படி, தனது முன்னாள் காதலி இப்போது யாரை காதலிக்கிறார்? இதற்கு முன்பு எத்தனை பேரைக் காதலித்துள்ளார்? அவருக்கு கல்யாணம் ஆகிவிட்டதா? அவர் உயிருடன் இருக்கிறாரா? என்பது உள்ளிட்ட மொத்தம் 1,886 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இந்தக் கேள்விகளுக்குப் பதில் கேட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள பொது தகவல் அலுவலருக்கு 97 மனுக்களை அனுப்பியுள்ளார்..
அதுமட்டுமல்ல, தான் கேட்ட தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை எனக் கூறி, கடலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தின் பொது தகவல் அலுவலருக்கு எதிராக, மாநில தகவல் ஆணையத்திலும் மேல்முறையீடு செய்தார் சந்தோஷ்..
ஆணையர் பிறப்பித்த உத்தரவு
இந்த மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் விபிஆர் இளம்பரிதி, சந்தோஷின் செயல்பாட்டுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.
"தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது பொதுமக்கள் அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள் மற்றும் பொதுநலன் சார்ந்த தகவல்களை பெறுவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால், இந்தச் சட்டத்தின் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் சந்தோஷ் செயல்பட்டுள்ளார்.. எந்தவிதமான பொதுநல நோக்கமும் இல்லாமல் 97 மனுக்களைத் தாக்கல் செய்திருப்பது அரசு ஊழியர்களுக்குத் தேவையற்ற பணிச்சுமையை ஏற்படுத்தும்..
சந்தோஷ் கேட்ட எந்தவொரு தகவலையும் வழங்க வேண்டிய அவசியமில்லை.. அடுத்த ஓராண்டுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சந்தோஷ் மனுத் தாக்கல் செய்யக்கூடாது" என்று ஆணையர் கடுமையான தடை உத்தரவையும் பிறப்பித்தார்.
மனநல ஆலோசனை
எனினும், சந்தோஷின் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு அவருக்கு உரிய மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் மாவட்ட சுகாதாரத் துறைக்கு மாநில தகவல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், முன்னாள் காதலிக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படும் புகார் தொடர்பாக சந்தோஷ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்பது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது...!!




Click it and Unblock the Notifications
