செங்கல்பட்டில் எமனாக வந்த எம்-சாண்ட் லாரி.. உயிரிழந்த கணவன் மனைவி.. 3 வயது குழந்தை உயிர் தப்பியது
சென்னை: செங்கல்பட்டு அருகே இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த எம்-சாண்ட் லாரி மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுடன் பயணித்த மூன்று வயது ஆண் குழந்தை லேசான காயங்களுடன் உயிர் தப்பியது. இந்த விபத்தால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், இருகுன்றம் பள்ளி மாமண்டூர் இடைய மெய்யூர் சந்திப்பு அருகே, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, முனுகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 41 வயதான வேலு என்பவர், தனது 38 வயதான மனைவி கவிதா என்கிற பச்சையம்மாள் மற்றும் மூன்று வயது ஆண் குழந்தையுடன், ஹோண்டா ஷைன் இருசக்கர வாகனத்தில் சென்னையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவர்களுக்குப் பின்னால் வேகமாக வந்த எம்-சாண்ட் மணல் லாரி, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கணவன், மனைவி இருவரும் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதே இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று வயது ஆண் குழந்தை, இந்த விபத்தில் முகத்தில் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. உடனடியாக குழந்தையை மீட்ட போலீசார், முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற படாளம் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார், உயிரிழந்த கணவன், மனைவியின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் மற்றும் லாரி ஓட்டுநர் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த கோர விபத்தால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Click it and Unblock the Notifications
