1 ஓட்டு வெற்றி.. தவெகவுக்கு எதிராகத் திரும்புமா? திருப்பத்தூர் தேர்தல் வழக்கு நாளை விசாரணை!
சென்னை: திருப்பத்தூர் சட்டசபை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட கேஆர் பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கு, நாளை மே 10 காலை 10:30 மணிக்கு விசாரிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் பதவியேற்பதை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டது.
திருப்பத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி, எம்.எல்.ஏ.வாக பதவியேற்க தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டசபை தொகுதியில், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி, திமுக வேட்பாளர் கேஆர் பெரியகருப்பனை விட ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
கேஆர் பெரியகருப்பன் 83,364 வாக்குகளையும், சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகளையும் பெற்றிருந்தனர். இறுதிச் சுற்று வரை லீடிங்கில் இருந்த பெரியகருப்பன், கடைசி சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது பின்னுக்குத் தள்ளப்பட்டு, 1 ஓட்டில் தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் திருப்பத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி எம்.எல்.ஏவாக பதவியேற்க தடை விதிக்க வேண்டும் என திமுக வேட்பாளர் கேஆர் பெரியகருப்பன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதி எஸ்.விக்டோரியா கௌரி மற்றும் நீதிபதி என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய கோடை விடுமுறை கால சிறப்பு அமர்வு அவசர வழக்காக ஞாயிற்றுக்கிழமை (நாளை மே 10) காலை 10:30 மணிக்கு விசாரிக்கிறது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் நாளை காலை 10 மணிக்கு பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் திமுக சார்பில் பெரிய கருப்பன் போட்டியிட்டு தொடர் வெற்றியைப் பெற்று வந்தார். இந்நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அவரே களம் இறங்கினார். இத்தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் திருமாறன், தவெக வேட்பாளராக சீனிவாச சேதுபதி, நாம் தமிழர் வேட்பாளராக ரம்யா மோகன் ஆகியோர் போட்டியிட்டனர்.
கடந்த மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் திமுக வேட்பாளர் கேஆர் பெரியகருப்பன் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதியை விட இடையே குறைந்த வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வந்தார். கடைசிப் பெட்டியை எண்ணும் போது அந்த எந்திரத்தில் திடீரெனக் கோளாறு ஏற்பட்டதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டது.
பின்னர் மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், அமைச்சர் பெரியகருப்பன் 83,374 வாக்குகளும், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகளும் பெற்றதாக அதிகாரிகள் அறிவித்தனர். இதனால் பெரியகருப்பனைவிட தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஒரு வாக்கால் தோற்றுப் போனது, தேர்தல் வரலாற்றில் அரிதான சம்பவமாகப் பார்க்கப்படுகிறது. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி, எம்.எல்.ஏ.வாக பதவியேற்க தடை விதிக்கக் கோரி அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், "திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கான தபால் வாக்குகள் சிவகங்கை மாவட்டத்தில் பதிவாகி இருப்பதால் அவற்றை மீட்டு பாதுகாக்க வேண்டும். மீட்கப்படும் தபால் வாக்குகளை திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் கணக்கில் சேர்க்க உத்தரவிட வேண்டும். மறுசரிபார்ப்புச் செயல்முறை தொடர்பாக பதிவான காணொளி காட்சிகளை பாதுகாக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.விக்டோரியா கௌரி, செந்தில்குமார் அடங்கிய கோடை விடுமுறை கால சிறப்பு அமர்வு அவசர வழக்காக நாளை காலை 10:30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு விசாரணை மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications